தேர்தலின் போது திமுக கொண்டாடவும், தேர்தலுக்குப் பிறகு தூக்கி எறியவும் வன்னியர்கள் என்ன கறிவேப்பிலையா? என்ற தலைப்பில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படும், மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு மணிமண்டபமும் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட ஏராளமான வெற்று வாக்குறுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அள்ளி வீசியிருக்கிறார்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தோல்வியடைவது மட்டுமின்றி, வைப்புத் தொகை கூட வாங்க முடியாதோ என்ற அச்சம் தான் அவரை இந்த நிலைக்கு தள்ளியிருக்கிறது. மக்களவைத் தேர்தலில் நகைக்கடனை தள்ளுபடி செய்வோம் என்பது உள்ளிட்ட புரட்டான வாக்குறுதிகளை வழங்கி, ஏழை மக்களை ஏமாற்றி கடனாளிகள் ஆக்கிய ஸ்டாலின், இப்போது விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் வன்னியர்களின் வாக்குகளை சுரண்டும் நோக்குடன் பொய் வாக்குறுதிகளை வீசியுள்ளார்.
ஆனால் பாவம்.... அத்தைக்கு மீசை முளைத்தால் என்ன நடக்கும்? என்று கற்பனையாக எழுதப் பட்ட கட்டுரையைப் படித்தால் எத்தகைய உணர்வு ஏற்படுமோ, அதேபோன்ற உணர்வு தான் ஸ்டாலின் அவர்களின் அறிக்கையை படிக்கும் போதும் ஏற்படுகிறது. வேலூர் தொகுதி தேர்தலின் போதே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது என்பதைக் கூட உணராமல் கற்பனையில் மிதக்கிறார் மு.க.ஸ்டாலின்.
வன்னியர்கள் என்றாலே எட்டிக்காயாக கசக்கும் ஸ்டாலின் அவர்களுக்கு இப்போது வன்னியர்கள் வெல்லக்கட்டியாக இனிக்கிறார்கள் போலிருக்கிறது. வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 20% இட ஒதுக்கீட்டை திமுக தான் வழங்கியதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப் போவதாகவும் ஸ்டாலின் கூறியிருக்கிறார். 1989-ஆம் ஆண்டில் வன்னியர்களுக்கு திமுக அரசு இடஒதுக்கீட்டை எளிதாக தூக்கிக் கொடுத்துவிடவில்லை.
தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள வன்னியர்களுக்கு 17% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 13.11.1969 அன்று அமைக்கப்பட்ட சட்டநாதன் குழு அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த பரிந்துரையை செயல்படுத்தாமல், மொத்த இடஒதுக்கீட்டின் அளவை 41 விழுக்காட்டிலிருந்து 49% ஆக உயர்த்தியதுடன் நிறுத்திக் கொண்டு வன்னியர்களுக்கு துரோகம் செய்தது கலைஞர் தலைமையிலான திமுக அரசு. அதன்பின் 1980-ஆம் ஆண்டில் வன்னியர் சங்கங்களை ஒருங்கிணைத்து 9 ஆண்டுகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி, தொடர் சாலைமறியல் போராட்டத்தின் போது 21 சொந்தங்களின் இன்னுயிரை தியாகம் செய்து பெற்றது தான் 20% இட ஒதுக்கீடு ஆகும்.
அப்போதும் அந்த இட ஒதுக்கீட்டை கலைஞர் மனமுவந்து தரவில்லை. வன்னியர்களுக்கு இன்னும் கூடுதலான இட ஒதுக்கீடு கிடைத்து விடக்கூடாது என்ற கெட்ட நோக்கத்திலும், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தருவதைத் தவிர வேறு வழியில்லை என்ற கட்டாயத்தின் பேரிலும் தான் இடஒதுக்கீட்டை கலைஞர் வழங்கினார். வன்னியர்களின் தொடர்சாலை மறியல் போராட்டத்திற்கு பிறகு 25.11.1987 அன்று என்னையும், பிற சமுதாயத் தலைவர்களையும் அழைத்துப் பேசிய அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க ஒப்புக்கொண்டார். ஆனால், அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாக அவர் மறைந்து விட்ட நிலையில், அடுத்து வந்த ஆளுனர் ஆட்சியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்காக 12.12.1988 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
அடுத்த ஒரு மாதத்தில் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தப்பட்டு, திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், ஆளுனர் ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் வன்னியர்களுக்கு மட்டும் 20%-க்கும் கூடுதலாக இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். அவ்வாறு கூடுதல் இட ஒதுக்கீடு கிடைப்பதைத் தடுப்பதற்காகத் தான் 1989&ஆம் ஆண்டில் கலைஞர் அவசரம், அவசரமாக இடஒதுக்கீடு வழங்கினார். இதுதொடர்பாக என்னை அழைத்துப் பேசிய கலைஞரிடம் வன்னியர்களுக்கு 20% தனி ஒதுக்கீடு வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதற்கு வாய்ப்பில்லை என்று கலைஞர் கூறிய போது, இட ஒதுக்கீட்டை 6 தொகுப்புகளாக பிரித்து வழங்கலாம் என்று வலியுறுத்தினேன்.
ஆனால், அதற்கும் ஒப்புக்கொள்ளாத கலைஞர், ‘‘இடஒதுக்கீட்டில் கூட உங்களுடன் என்னையும் சேர்த்துக் கொள்ள மறுக்கிறீர்களே? வெறும் 10,000 பேர் மட்டுமே உள்ள எங்களின் இசை வேளாளர் சமூகத்தையும் இந்தப் பிரிவில் சேர்த்துக் கொள்ளுங்களேன்’’ என்று கூறி வன்னியருக்கு மட்டும் கிடைக்க வேண்டிய 20% இட ஒதுக்கீட்டை தமது இசைவேளாளர் சமுதாயம் உள்ளிட்ட 108 சமூகங்கள் கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு வழங்கி துரோகம் இழைத்தவர் கலைஞர். ஸ்டாலினின் சமூகத்திற்கு தான் வன்னியர்களின் போராட்டத்தால் இட ஒதுக்கீடு கிடைத்ததே தவிர, வன்னியர்களுக்கு திமுக இட ஒதுக்கீடு பெற்றுத் தரவில்லை. இந்த சமூக நீதி வரலாறு எல்லாம் அப்போது வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்த, அப்போதைய இளைஞரணித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
1989-ஆம் ஆண்டு மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு ஏற்படுத்தப்பட்ட பிறகு தனி ஒதுக்கீடு கேட்டு பா.ம.க. போராடி வந்தது. 30 ஆண்டுகளாக அந்தப் போராட்டம் தொடருகிறது. அதன்பின் 12 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இருந்தது. அப்போதெல்லாம் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க திமுகவுக்கு மனம் வரவில்லை. 69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்கலாம் என்று ஆணையிட்டது. அதன்படி தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துமாறு 28.10.2010 அன்று அப்போதைய முதலமைச்சர் கலைஞரை 27 சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சந்தித்து வலியுறுத்தினேன். ஆனால், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை அவர் நடத்தவில்லை. காரணம்..... அத்தகைய கணக்கெடுப்பை நடத்தினால் வன்னியர்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டியிருக்கும் என்ற எண்ணம் தான். அதுமட்டுமின்றி, 30.07.2010 அன்று முரசொலியில் எழுதிய கடிதத்தில், வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று வெளிப்படையாகவே கலைஞர் அறிவித்தார். அப்படிப்பட்ட திமுக, இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தனி ஒதுக்கீடு வழங்குவோம் என்று கூறுவது ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவதற்கு இணையானது தான்.
1996-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த பேராசிரியர் பொற்கோ சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், ராஜ்மோகன் என்ற இ.கா.ப அதிகாரி தமிழக காவல்துறை தலைமை இயக்குனராகவும் நியமிக்கப்பட்டதாகவும் ஸ்டாலின் கூறியிருக்கிறார். இதன்மூலம் 1967 முதல் 1996 வரை திமுக ஆட்சியில் இருந்த காலத்தில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த எவரையும் துணைவேந்தராகவோ, காவல்துறை தலைமை இயக்குனராகவோ நியமிக்கவில்லை என்பதை ஸ்டாலின் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஸ்டாலினால் குறிப்பிடப்பட்ட இவர்களின் நியமனமும், பின்னாளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக திரு.காசி விஸ்வநாதன் நியமிக்கப் பட்டதும் எனது வலியுறுத்தலின் பெயரில் தான் நடந்தது என்பதும் மு.க.ஸ்டாலின் அறியாத உண்மை.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் கூட வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் போராடித் தான் பெற வேண்டியிருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாததை சுட்டிக்காட்டி, வன்னியர் ஒருவரை நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்று கலைஞரிடம் வலியுறுத்தி வந்தேன். 2000&ஆவது ஆண்டில் 8 நீதிபதிகள் நியமிக்கப்பட்டபோது, வன்னியர்களுக்கு வாய்ப்ப்பளிக்க மறுத்து விட்ட கலைஞர், அவரது சமுதாயத்தைச் சேர்ந்தவரும், உறவினருமான ரவிராஜ பாண்டியன் என்பவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்தார். அதன்பின் இப்படி துரோகம் செய்து விட்டீர்களே? என கலைஞரிடம் சண்டையிட்ட பிறகு தான் 2001-ஆம் ஆண்டில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த குலசேகரன் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவ்வாறாக திமுக ஆட்சிக்காலத்தில் வன்னியர்களுக்கான உரிமைகள் அனைத்தையும் கலைஞரிடம் சண்டையிட்டு தான் பெற்றுத் தந்தேன்.
இவற்றையெல்லாம் விட கொடுமை திமுகவில் வன்னியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி தான். வன்னியர் ஒருவரை -திண்டிவனம் வெங்கட்ராமன் - முதன்முதலில் மத்திய அமைச்சராக்கியது திமுக தான் என்றும் ஸ்டாலின் கூறியிருக்கிறார். அவருக்குப் பிறகு திமுக மொத்தம் 15 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தது. அப்போது வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரையாவது கேபினட் அமைச்சராக்கியது உண்டா? 1989 முதல் 2013 வரை மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக மொத்தம் 22 அமைச்சர் பதவிகளைப் பெற்றது. அவற்றில் வெறும் 2 பதவிகள் மட்டுமே 20% மக்கள் தொகை கொண்ட வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த திண்டிவனம் வெங்கட்ராமன், அரக்கோணம் ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. ஆனால், மக்கள்தொகையில் 0.01% கூட இல்லாத ஸ்டாலினின் சமுதாயத்திற்கு 6 அமைச்சர் பதவிகள், அதுவும் கேபினட் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. திமுகவுக்கு உயிர் கொடுத்த வன்னியர்களுக்கு திமுகவில் இவ்வளவு தான் மரியாதை.
திமுக மாவட்ட செயலாளர்கள் நியமனத்திலாவது வன்னியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப் பட்டுள்ளதா? என்றால் அதுவும் இல்லை. வன்னியர்கள் அதிகம் வாழும் சென்னை, காஞ்சி, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 14 வருவாய் மாவட்டங்களில், திமுகவுக்கு அமைப்பு ரீதியாக மாநகர மாவட்டங்கள் உள்ளிட்ட 29 மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் 11 மாவட்ட செயலாளர் பதவி மட்டுமே வன்னியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதி அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் அமைப்புரீதியாக 3 மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றில் கூட வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மாவட்டச் செயலாளர்களாக ஸ்டாலின் நியமிக்கவில்லை.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ‘ஏ.ஜி’ என்று அழைக்கப்பட்ட ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதை விட கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம் எதுவும் இருக்க முடியாது. ஏ.கோவிந்தசாமி அவர்கள் இன்றளவும் நான் மதிக்கும் தலைவர். அவரது குடும்பத்தினர் இன்றளவும் என்னுடன் தொடர்பில் உள்ளனர். இரு ஆண்டுகளுக்கு முன் ‘ஏ.ஜி’ அவர்களின் நூற்றாண்டு வந்த போது, திமுக சார்பில் பிரமாண்டமாக விழா எடுத்துக் கொண்டாடியிருக்கலாமே? அவ்வாறு செய்வதை யார் தடுத்தது? ‘ஏ.ஜி’யின் நூற்றாண்டு விழாவை அவரது புதல்வர் ஏ.ஜி.சம்பத் மட்டும் தானே அவரது சொந்த ஏற்பாட்டில் நடத்தினார். குறைந்தபட்சம் அந்த விழாவுக்கு திமுக தலைமைக் கழக நிர்வாகிகள் யாரையாவது ஸ்டாலின் அனுப்பியிருக்கலாமே... அதைக் கூட செய்யாதது ஏன்?
திமுக ஆட்சிக்கு வந்தால் ‘ஏ.ஜி’ அவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்ட சில மணி நேரங்களில் அவரது புதல்வர் ஏ.ஜி.சம்பத்தை குடும்பத்துடன் சென்னைக்கு அழைத்து வந்து நன்றி கூற வைத்த மு.க.ஸ்டாலின் அவர்கள், இரு வாரத்திற்கு முன் அதே சம்பத் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்த போது அவருக்கு வாய்ப்பு வழங்கி ‘ஏ.ஜி’ அவர்கள் மீதான விசுவாசத்தை நிரூபித்து இருக்கலாமே? 1952-ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்தலில் இதே விக்கிரவாண்டி தொகுதியில் தானே ‘ஏ.ஜி’ அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் கொடுத்த உதயசூரியன் சின்னத்தில் தானே மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகவும், மேயராகவும், அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் ஆனார். அந்த நன்றிக் கடனுக்காகவாவது ‘ஏ.ஜி’ அவர்களின் புதல்வருக்கு ஸ்டாலின் வாய்ப்பளித்திருக்க வேண்டாமா? மாறாக 1996-ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 23 ஆண்டுகளாக ‘ஏ.ஜி’ அவர்களின் குடும்பத்திற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பே தராமல் ஒதுக்கி வைத்திருந்ததற்கு காரணம் வன்னியர்கள் மீதான ஸ்டாலினின் வெறுப்புணர்வு என்பதைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?
அதுமட்டுமின்றி, திமுகவின் தளகர்த்தர்களாக இருந்த வீரபாண்டி ஆறுமுகம், மதுராந்தகம் ஆறுமுகம், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் அவர்களின் கடைசி காலத்தில் திமுக தலைமையால் எப்படியெல்லாம் உதாசீனப் படுத்தப்பட்டார்கள்; எப்படியெல்லாம் அவமானப் படுத்தப்பட்டார்கள்; அதனால் அவர்கள் எந்த அளவுக்கு மனம் நொந்து மறைந்தார்கள் என்பதை வன்னியர்கள் நன்கு அறிவர். அவற்றை எல்லாம் மறைத்து விட்டு வன்னியர் நண்பர் வேஷம் போட மு.க. ஸ்டாலின் முயன்றால் அது எடுபடாது.
ஒரு கட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்ட காலத்தில் திமுகவை வழிநடத்தும் பொறுப்பை வன்னியரான ‘ஏ.ஜி’ அவர்களிடம் பேரறிஞர் அண்ணா ஒப்படைத்தார். ஆனால், 1969-ஆம் ஆண்டில் திமுக தலைவராக கலைஞர் பொறுப்பேற்ற பிறகு இன்று வரையிலான 50 ஆண்டுகளில் திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளில் எத்தனை வன்னியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்போது தான் வேறு வழியின்றி திமுகவின் பொருளாளராக துரைமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கும் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. பெயரளவில் மட்டும் அவர் பொருளாளராக பதவி வகிக்க, அந்த பதவிக்கு உரிய அதிகாரங்கள் அனைத்தையும் மு.க.ஸ்டாலினை சுற்றியுள்ள அவரது துதிபாடிகள் தான் அனுபவிக்கின்றனர் என்பதை மறுக்க முடியுமா?
வன்னியர்கள் மீது பாசம் வைத்திருப்பதாகக் கூறிக் கொள்ளும் மு.க.ஸ்டாலின் கட்சியின் தலைமை தான் தருமபுரி நிகழ்வின் போது வன்னியர்களை ஆதிக்க சாதி என்று விமர்சித்தது. தருமபுரிக்கு உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி வைத்து வன்னியர்கள் மீது அபாண்டமான பழிகளை சுமத்தியது. தருமபுரிக்கு உண்மை கண்டறியும் குழுமை அனுப்பிய திமுக, மரக்காணம் கலவரத்தின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் இரு வன்னியர்கள் கொடூரமான வெட்டிக் கொல்லப்பட்ட போதும், கடலூர் மாவட்டம் குச்சிப்பாளையம் கிராமத்தின் வன்னியர்கள் தாக்கப்பட்ட போதும் உண்மை கண்டறியும் குழுக்களை திமுக தலைமை அனுப்பாதது ஏன்? வன்னியர்கள் மீதான ஸ்டாலினின் வெறுப்பு தானே?
பொன்பரப்பி வன்முறையைத் தொடர்ந்து தம்மை கிழட்டு சிறுத்தை என்று அழைத்துக் கொண்ட போலி மதபோதகர் எஸ்ரா சற்குணம் வன்னியர்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று விமர்சித்த போதும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வன்னியர்களை மரம் வெட்டிகள் என்று கொச்சைப் படுத்திய போதும், ‘வன்னியர்கள் மீது பாசம் கொண்டவரான’ திமுக தலைவர் ஸ்டாலின் சீறி எழாதது ஏன்? அவ்வாறு பொங்கி எழாமல் அவரைக் கட்டுப்படுத்தியது யார்? முழுக்க முழுக்க வன்னியர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஸ்டாலின் அவர்கள், இப்போது திடீரென தம்மை வன்னியர்களின் தோழன் என்று கூறிக் கொண்டால் அதை நம்பி ஏமாற வன்னியர்கள் ஒன்றும் அப்பாவி திமுக தொண்டர்கள் அல்ல. தேர்தலின் போது கொண்டாடவும், தேர்தல் முடிந்தவுடன் தூக்கி எறிவதற்கு வன்னியர்கள் கறிவேப்பிலையும் அல்ல என்பதை காலமும், மக்கள் தீர்ப்பும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உணர்த்தும். இவ்வாறு கூறியுள்ளார்.