வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான சி.வெ. கணேசன் முன்னிலை வகித்தார்.
எம்.எல்.ஏ.க்கள் கடலூர் ஐயப்பன், நெய்வேலி சபா ராஜேந்திரன், காட்டுமன்னார்கோயில் சிந்தனை செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இள புகழேந்தி, துரை கி. சரவணன், முத்துக்குமார், கலைச்செல்வன், முன்னாள் எம்.பி. இளங்கோவன், காங்கிரஸ் கட்சி மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் திலகர், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் ராமலிங்கம், பிச்சை, குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மாதவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் துரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர்கள் செந்தில், நீதி வள்ளல், அறிவுடை நம்பி, திராவிட மணி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் மணிகண்டன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அப்துல் ரகுமான் ரப்பானி, மக்கள் நீதி மையம் விமல் ராஜ், குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றியச் செயலாளர் சிவக்குமார், கடலூர் மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், வடலூர் நகராட்சித் தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பேசுகையில், “திமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைத்துள்ளோம். நாம் அனைவரும் வேறுபாடுகளை மறந்து கூட்டணி கட்சி நிர்வாகிகளை அரவணைத்து தேர்தல் பணி ஆற்ற வேண்டும். சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருமாவளவன், கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.
இதனையடுத்து அமைச்சர் சி.வெ. கணேசன் பேசுகையில், “கடலூர், சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய நாம் வேறுபாடுகள் மறந்து ஒரே குடும்பம் போல் கடுமையாக பாடுபட வேண்டும். திமுக ஆட்சியின் சாதனைகளான காலை உணவு திட்டம், மகளிர் உரிமை தொகை போன்ற நல்ல திட்டங்களையும், ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் சென்று கூறி வாக்கு கேட்க வேண்டும். இந்தியாவில் மற்ற மாநிலங்கள் நம் முதல்வரின் திட்டங்களை பார்த்து அவர்கள் மாநிலத்தில் கொண்டு வரும் அளவிற்கு நல்லாட்சி செய்து வருகிறார். இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்க 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். வாக்குகள் மூன்று பிரிவாக பிரிந்து கிடக்கிறது. நாம் ஈசியாக ஜெயித்து விடலாம் என அலட்சியமாக இருக்கக் கூடாது. நாம் கடுமையாக உழைத்து அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்” என்றார்.
பட விளக்கம் - வடலூரில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார். அருகில் அமைச்சர் சி.வெ. கணேசன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள்.