“இங்கே நான் மேடைல பேசுறேன்ல. அங்கங்கே உளவுத்துறை போலீஸை வச்சு ரெகார்ட் பண்ணுவாங்க. இவன் என்ன பேசுவான்? எப்படி பேசுவான்? எடக்குமடக்கா பேசுவானே? அப்படின்னுதான். ஆமா.. குண்டக்க மண்டக்க பேசுவேன். அது உண்மைதான். ஆனா.. நியாயமா பேசுவேன்.” என்று சிவகாசியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடந்த மே தின விழாவில் பழைய பாணியில் பேச்சை ஆரம்பித்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, திமுக அரசு மீதான தாக்குதலைத் தொடர்ந்தார்.
“தேனிக்கு போனாரு முதலமைச்சர் ஸ்டாலின். கரண்ட காணோம்னு மக்கள் கேட்கிறாங்க. திமுக ஆட்சிக்கு வந்து இன்னும் ஒரு வருஷம் முடியல. அதுக்குள்ள இத்தனை பிரச்சனைங்க. மக்களை வாட்டி வதைக்கிற வேலையைத்தான் திமுக ஆட்சி பண்ணுது. இங்கே முதலாளிகிட்டயும் துட்டு இல்ல; தொழிலாளிகிட்டயும் துட்டு இல்ல. தமிழ்நாட்டுல நாலு திசையிலயும் மக்கள் திமுகவை குறை சொல்லுறாங்க. இந்த ஆட்சியை மக்கள் விரும்பல. என்ன ஆட்சி இது? எங்கே பார்த்தாலும் பிரச்சனை. இதையெல்லாம் முதலமைச்சர்தான் பார்க்கணும். ஆடச் சொன்னால் ஆடணும்; பாடச் சொன்னால் பாடணும். ரோடு சரியில்லைன்னு சொல்லக்கூடாது. அடுத்தவங்க மேல பழிபோட்டு அவங்கள பிடிச்சு உள்ளே போடறதுல காட்டுற கவனத்தை, இந்த ஆட்சியாளர்கள் மக்களோட நலனில் காட்டணும். இல்லைன்னா, வர்ற தேர்தல்ல மோசமான முறையில திமுக தோற்கும். உள்ளாட்சித் தேர்தல்ல திமுக எப்படி ஜெயிச்சுச்சுன்னு ஊரு உலகத்துக்கே தெரியும். சட்டமன்றத் தேர்தல்ல அப்படி பண்ணமுடியாது.
கரண்ட் கட்-ங்கிறது திமுக ஆட்சிக்கு அவமானம். இபிஎஸ் ஆட்சி வேணாம்னு முடிவெடுத்த மக்கள் இப்ப யூபிஎஸ்-ஐ தேடறாங்க. அதிமுகவின் அனைத்து திட்டங்களையும் நிறுத்திய திமுக அரசு, புதிய திட்டங்களைக் கொண்டு வரல. ஓட்டு போட்ட மக்கள் வேதனைல இருக்காங்க. திமுகவினர் எதற்கெடுத்தாலும் கவர்னரை குற்றம் சொல்லுறாங்க. கவர்னர் அதிகாரத்துல யாரும் தலையிடக் கூடாது. கவர்னரை குற்றம் சொல்லிட்டு, ஒன்றிய அரசுன்னு சொல்லுற முதல்வர், ஒவ்வொரு மத்திய அமைச்சர்கிட்டயும் உதவி கேட்கிறார். தமிழ்நாட்டுல ஒரு பேச்சு, டெல்லிக்குப் போனால் ஒரு பேச்சுன்னு முதல்வர் பேசுறார். திமுகவுக்கு வாக்கு வங்கியே கிடையாது. அதிமுகவுல பிளவு ஏற்படும்போது மட்டுமே ஆட்சிக்கு வரும். தமிழகத்தின் நிலவரம் கலவரமாக உள்ளது. இந்த ஆட்சி நல்லது செய்வதாக யாருமே சொல்லல. திமுக ஆட்சியை மக்கள் விரும்பல” என்று பேசினார்.
ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா? ராஜேந்திர பாலாஜியும் அப்படித்தான்!