தமிழக வணிக வரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சரும், அதிமுகவின் மேற்கு மா.செவுமான கே.சி.வீரமணி வீடு ஜோலார் பேட்டையில் உள்ளது. இன்று காலை டெல்லியில் இருந்து வந்திருந்த வருமான வரித்துறையின் உயர் அதிகாரி ஒருவரின் தலைமையில் சென்னை, வேலூர், காட்பாடி, ஜோலார்பேட்டை என 120 பேர் ஓரே நேரத்தில் ரெய்டில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதில் ரியல் எஸ்டேட் அதிபர்களான ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் இருவரின் வீடு, அலுவலகம், கே.வி.குப்பம் சிவக்குமார், தமிழக அமைச்சர் வீரமணியின் அரசியல் உதவியாளர் சிவக்குமார் வீட்டில் ரெய்டு நடந்துக்கொண்டுள்ளது. இதில் அமைச்சர் வீரமணியின் வீடு, இடையாம்பட்டியில் உள்ள கட்சி அலுவலகம், அவரது திருமண மண்டபம், திருப்பத்தூரில் உள்ள ஹோட்டல் போன்றவற்றில் பிப்ரவரி 21ந்தேதி காலை 10 மணி முதல் சென்னை, வேலூரில் இருந்து வந்துள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனை பற்றி தகவல் அறிந்ததும் வேலூர் மாவட்ட அதிமுகவினர் மட்டுமல்லாமல் அதிமுக தலைமையையும் அதிரவைத்துள்ளது. மத்திய அரசை ஆளும் பாஜகவோடு அதிமுக கூட்டணி சேர்ந்து 3 நாட்களே ஆன நிலையில் அதிமுகவை சேர்ந்த தமிழக அமைச்சரின் வீட்டில் வருமானவரித்துறை ரெய்டு நடத்துவது அதிமுகவினரை அதிர வைத்துள்ளது.
இதுப்பற்றி அமைச்சர் வீரமணி, முதல்வர், துணை முதல்வரிடமே பொங்கியுள்ளார். எதற்காக அவுங்க உங்களை குறிவச்சிருக்காங்கன்னு தெரியல என பதில் கூறியுள்ளனர். இதனால் அமைச்சரும் அதிருப்தியில் உள்ளார் எனக்கூறப்படுகிறது.
இந்த ரெய்டு பாஜக – அதிமுக கூட்டணியை பாதிக்குமா?, வீரமணி அடுத்து என்ன செய்யப்போகிறார்? என்பது இன்னும் தெரியாததால் அவரது ஆதரவாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.