கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று நடத்தப்பட்ட கூட்டத்திலும் 3 பெண்கள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்கள் முன்பு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். கந்துகுருவில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நெரிசலில் சிக்கி சிலர் கால்வாயில் விழுந்து படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் அதிகமானோர் காயம் அடைந்துள்ளதாகவும், சிலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் ஆந்திர அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களை சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாகவும் சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று ஆந்திரா குண்டூரில் தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார். இதில் சந்திரபாபு தலைமையில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு எழை பெண்களுக்கு கைத்தறி புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் இலவச புடவைகளை வாங்குவதற்காக ஏராளமான பெண்கள் ஒன்று திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.