காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி தமிழகத்தின் முக்கியமான மூன்றாவது பெரிய நகரம் ஆகும். எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோது அதன் தலைநகரமாகத் திருச்சியை மாற்றும் திட்டத்தினை வழிவகுத்தார். அரசியல் கட்சிகளின் எதிர்ப்பினால் இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
தமிழகத்தின் ஒரு முனையில் இருக்கும் சென்னையின் தலைமைச் செயலகத்துக்கு, தமிழ்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மக்கள் வருவது சிரமாக உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தலைமைச் செயலகத்துக்கு எளிதாக வரத் தமிழகத்தின் நடு மையத்தில் இருக்கக்கூடிய திருச்சியை தலைநகரமாக மாற்றவேண்டும் என்று எம்.ஜி.ஆர் கருதினார். இதற்காக 1983-ல் திருச்சியை தலைநகரமாக்கும் திட்டத்தை அறிவித்தார். அதனால் தற்போது வரை திருச்சி அரசியல்கட்சிகளுக்கும், உயர் பதவியில் இருப்பவர்களுக்கு எப்போதும் இது முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருக்கும் என்பதால் மாற்று கருத்து இல்லை.
திருச்சி நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் இருந்த சட்டமன்றத் தொகுதிகள் முசிறி, லால்குடி, திருவரங்கம், திருச்சி1, திருச்சி2, திருவெறும்பூர் ஆகியவையாகும். திருச்சி 1, 2 ஆகியவை திருச்சி கிழக்கு, மேற்கு என மாற்றப்பட்டது. கந்தர்வக்கோட்டை (தனி) புதிதாக வந்தது. லால்குடி, முசிறி நீக்கப்பட்டது. புதுக்கோட்டை இணைந்தது.
தற்போது திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, என 6 சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கியது.
இதுவரை வெற்றிபெற்றவர்கள்:
1951 - மதுரம் - சுயேச்சை. இவர் திருச்சி பிரபலமான மருத்துவர். குடும்பம் தற்போதும் திருச்சியில் புத்தூர் பகுதியில் குருமெடிக்கல் என்று வைத்திருக்கிறார்கள்.
1957 - எம். கே. எம். அப்துல் சலாம் - இந்திய தேசிய காங்கிரஸ்
திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர், புனிதவளனார் கல்லூரியில் படித்தவர். திருச்சி நகராட்சியின் உறுப்பினராக இருந்து பாரளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
1962 - கே. ஆனந்த நம்பியார்- சி.பி.ஐ , 1967 - கே. ஆனந்த நம்பியார் - சி.பி.ஐ
1946 ஆம் ஆண்டில், நம்பியார் மெட்ராஸ் சட்டமன்றத் தேர்தலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946 முதல் 1951 வரை அவர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். 1951 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறையிலிருந்து வேட்பாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1951 முதல் 1957 வரை மயிலாடுதுறை அல்லது மாயூராம் மற்றும் 1962 முதல் 1971 வரை திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். தன்னுடைய இறுதி காலத்தை திருச்சியே கழித்து இங்கே தன்னுடைய ஆயுள் காலத்தை முடித்தார்.
1971 - மீ. கல்யாணசுந்தரம் -சி.பி.ஐ - 1977 - மீ. கல்யாணசுந்தரம் -சி.பி.ஐ
மீனாட்சிசுந்தரம் கல்யாணசுந்தரம் (அக்டோபர் 20, 1909 - ஜூலை 27, 1988) இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1952 தேர்தலில் திருச்சிராப்பள்ளி - இரண்டாம் தொகுதியில் இருந்து 1962 மற்றும் 1962 தேர்தல்களில் திருச்சி வடக்கு தொகுதியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்யாணசுந்தரம் 1971 முதல் 1976 வரைக்கும், 1977 முதல் 1980 வரைக்கும், 1980 முதல் 1986 வரையான இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபை உறுப்பினர்களுக்கும் லோக் சபாவின் உறுப்பினராகவும் பணியாற்றினார். இவர் இந்திராகாந்தி, மற்றும் ராஜீவ்காந்தி ஆகியோர் பிரதமராக இருந்தபோது தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
1980 - என். செல்வராஜ் - தி.மு.க
திருச்சி மாவட்ட தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சராவார். இவர் 1987 முதல் 1993 வரை இப்பதவியில் இருந்தார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராக 1980 - 84-ம் ஆண்டுகளில் இருந்தார்.
செல்வராஜ் தி.மு.க சார்பில் 2006 ஆண்டு முசிறி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அ.தி.மு.க. வேட்பாளரான பூனாட்சியை 10,927 வாக்குகளில் தோற்கடித்தார். தி.மு.க. அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக 2006 முதல் 2011வரை இருந்தார். இவர் ஒருவர் மட்டுமே திருச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே திமுக கட்சிகாரர் என்பது குறிப்பிடதக்கது.
1984 - அடைக்கலராஜ் - இந்திய தேசிய காங்கிரஸ்
1989 - அடைக்கலராஜ் - இந்திய தேசிய காங்கிரஸ்
1991 - அடைக்கலராஜ் - இந்திய தேசிய காங்கிரஸ்
1996 - அடைக்கலராஜ் - த.மா.கா.
திருச்சி மக்களவைத் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர்.
1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜி.கே. மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரசு சார்பில் போட்டியிட்டு வென்றார். இவர் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இவருடைய மகன் தான் தற்போது ஜோசப்லூயிஸ் காங்கிரஸ் கட்சியில் சீட்டு கேட்டு போராடி வருகிறார்.
1998 - ப. ரங்கராஜன் குமாரமங்கலம் - பிஜேபி
1999 - ப. ரங்கராஜன் குமாரமங்கலம் - பிஜேபி
ரங்கராஜன் குமாரமங்கலம் இந்திய தேசிய காங்கிரசிலும் பின் பாரதீய ஜனதா கட்சியிலும் அமைச்சராகப் பதவி வகித்தார். காங்கிரஸ் சார்பில் 1984-1996 வரை சேலம் மக்களவை உறுப்பினராகவும், பாஜக சார்பில் 1998-2000 வரை திருச்சிராப்பள்ளி மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜீலை 1991- டிசம்பர் 1993 வரை நரசிம்ம ராவ் அரசில் சட்டம், நீதி மற்றும் நிறுவனங்களைக் கையாளும் அமைச்சராகவும் வாஜ்பாய் அரசில் மின் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். திருச்சியில் எம்.பி.யாக இருந்தபோதே இவர் உடல்நலக் குறைவினால் இறந்து போனார்.
தலித் எழில்மலை 2001
தலித் எழில்மலை இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆவார். 1998-ல் இரண்டாம் வாஜ்பாய் அரசாங்கத்தின் போது, இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இருந்தார். இவர் மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தார். இவர் சிதம்பரம் தொகுதியிலிருந்து 12-வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இவர் அதிமுகவில் சேர்ந்தார். 2001 ஆம் ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் அதிமுகவின், நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2004 - எல். கணேசன்- ம.தி.மு.க.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி கீழையூர் கிராமத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தி.மு.க.வின் சார்பில் 1980 ஜூன் 30 ஆம் நாள் முதல் 1986 ஏப்ரல் 10 ஆம் நாள் வரை பணியாற்றினார். 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தளகர்த்தர்களில் முதன்மையானவர். 1971-ல் திமுகவின் மாநில மாணவரணி செயலாளராக பணியாற்றியுள்ளார்.1993-ல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்உருவானபோது இவர் அதன் அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது திமுகவில் இணைந்து தேர்தல் பணிக்குழு செயலாளராக பணியாற்றி வருகிறார்.
எல்.கணேசன் திருச்சியில் இருந்து ஜெயித்ததினால் தற்போது எம்.பி. தேர்தலில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். கடைசியில் உட்கட்சி குழப்பத்தில் தவிர்க்கப்பட்டு தற்போது ராஜ்ஜியசபா சீட்டு கொடுத்துள்ளார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்.
2009 - ப. குமார் - அதிமுக
2014 - ப. குமார் - அதிமு.க
ப. குமார் தற்போதைய திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும் ஆவார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த இவர் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டைத் தாலுக்காவில் உள்ள புனல்குளம் என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சட்டத்துறையில் பணியாற்றிய இவர் திருமணமானவர். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். பிப்ரவரி 2014 ஆம் ஆண்டு தான் போட்டியிட்ட அதே திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதிமுகவின் உறுப்பினரான ப. குமார் 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சிராப்பள்ளி தொகுதியில் போட்டியிட்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாருபாலா தொண்டைமானை 4,335 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 2,98,710 ஆகும். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் அவருடைய கட்சியின் பொதுச்செயலாளரான ஜெயலலிதாவால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இத்தேர்தலிலும் ப.குமார் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திராவிட முன்னேற்றக்கழகத்தைச் சேர்ந்த மு. அன்பழகனைவிட அதிக வாக்குகள் பெற்று இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடைசியாக 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற எம்.பி தேர்தலில் அதிமுக கூட்டணியில் ப.குமார் 4,58,478 தி.மு.க. கூட்டணியில் அன்பழகன் 3,08,002, தே.மு.தி.க. கூட்டணியில் ஏ.எம்.ஜி.விஜயகுமார் 94,785, காங்கிரஸ் சார்பில் சாருபாலா தொண்டைமான் 51,537 ஆகிய வாக்குகளை பெற்றனர்.
இறுதி செய்யப்பட்ட திருச்சி எம்.பி. தொகுதியில் உள்ளட்டக்கிய சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள்.
ஸ்ரீரங்கம் : 2,91,711, திருச்சி (மேற்கு): 2,57,089, திருச்சி (கிழக்கு): 2,44,662, திருவெறும்பூர்:2,79,937, கந்தர்வகோட்டை - 1,89,106, புதுக்கோட்டை - 2,26,762. ஆக மொத்தம் திருச்சி பாரளுமன்ற மொத்தம் வாக்காளர்கள் 14,89,267.
நடக்கவிருக்கும் எம்.பி. தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. கட்சியை சேர்ந்த இளங்கோவன். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமான மருத்துவர் என்பதும், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர் என்பதும் கூடுதல் பலம். திருச்சிக்கு புதிய வேட்பாளர் என்பதால் எந்த வித விமர்சனமும் வைக்க முடியாது என்பதே இவருக்கு கொஞ்சம் கூடுதல் பலம்.
அமுமுக கட்சியின் சார்பில் போட்டியிடும் முன்னாள் மேயர் சாருபாலா திருச்சி - புதுக்கோட்டை மக்களுக்கு நன்கு அறிமுகமான நபர். இவருக்கு இரண்டு முறை போட்டியிட்ட அனுபவம் இந்த முறை வெற்றிபெற வேண்டும் என்கிற துடிப்பும் தற்போது வேட்பாளர் அறிவிப்பும், அவரை வரவேற்ற அன்றைய தினம் தொண்டர்களின் குதுகலமான மனநிலையே பார்க்கும்போது தெரிகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் வேட்பாளர் யார் என்பதை தற்போது வரை இழுபறியாக உள்ளது. திருநாவுக்கரசுக்கும் ஜோசப் லூயிசுக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கிறது. திருச்சி தேர்தல் களம் கடுமையான போட்டியை உருவாக்கியுள்ளது.