தேர்தல் என்றாலே முதலில் நியாபகத்திற்கு வருவது முதலில் பணம், ஒவ்வொரு கட்சியும் தங்களுடைய தகுதிக்கு தகுந்தாற்போல வாக்காளா்களுக்கு பணமாகவோ, பொருளாகவோ, ஏதோ ஒரு வகையில் வாக்காளா்களுக்கு கொடுத்து அவா்களுடைய வாக்கை பெற்றுவிட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டுவார்கள். அதேபோல் மக்களும் வேட்பாளா்கள் கொடுக்கும் பணத்தை பெற்றுக்கொண்டு அவா்கள் இறுதியாக முடிவு செய்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்களிப்பார்கள்.
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளா் கு.ப.கிருஷ்ணன் தொடர் தோ்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் போகும் இடமெல்லாம் அவருக்கு எதிர்ப்பு எழுந்தது. அதோடு பல இடங்களில் அவரை ஊருக்குள்ளே விடவில்லை. குறிப்பாக ஸ்ரீரங்கம் நகர பகுதியில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
குறிப்பாக பெண்கள் கடந்த 30 ஆண்டுகளில் எங்களுக்கு என்று என்ன செய்தீா்கள். பண மதிப்பிழப்பு ஏற்பட்டபோது பண மூட்டையை ஆற்றில் கொட்டிய நீங்கள் எங்களுக்கு என்ன நன்மை செய்துவிட போகிறீா்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளனா்.
இதனால் மக்களின் மனநிலையை அறிந்து கொண்ட கு.ப.கிருஷ்ணன் நேற்று மாநகர பகுதியில் தங்களுடைய வழக்கமான பிரம்மாஸ்தரத்தை கையில் எடுத்துள்ளார். பெண்களுக்கு புடவையும் , புடவைக்குள் ஆயிரம் ரூபாயும் வைத்து கொடுத்துள்ளார். அதோடு பூத் சீட்டு கொடுக்கும் போது ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம் என்று உறுதியளித்து சென்றுள்ளார்.
ஒரு ஓட்டுக்கு 2ஆயிரம் ரூபாய் சராசரியாக இந்த ஸ்ரீரங்கம் தொகுதியில் 3 லட்சத்திற்கும் அதிமான வாக்காளா்கள் உள்ளனா். தோ்தல் விதிமுறைப்படி வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பது என்பது மிகப்பெரிய குற்றம் என்பது தெரிந்தும் வேட்பாளா்கள் கொடுக்க அதிகாரிகள் துணை போகிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது. தோ்தல் ஆணையம் இதுக்குறித்து நடவடிக்கை எடுக்குமா? என்பதை சற்று பொருத்திருந்து பார்ப்போம்.