
கடந்த ஜூலை 18- ஆம் தேதி அன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது முதலே காங்கிரஸ், தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை, உறுப்பினர்கள் நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் ஜிஎஸ்டி உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து, பதாகைகளுடன் முழக்கமிட்டு தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இதனால் அவை அலுவல நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இன்று (26/07/2022) காலை மாநிலங்களவை கூடிய போது, விலைவாசி உயர்வு, எம்.பி.க்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை முதலில் நண்பகல் 12.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல், மக்களவையிலும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை முதலில் பிற்பகல் 11.45 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
பின்னர், மாநிலங்களவை மீண்டும் கூடிய போது, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் தொடர்ந்து, அமளியில் ஈடுபட்டதால், தி.மு.க.வைச் சேர்ந்த கனிமொழி என்விஎன் சோமு, சண்முகம், என்.ஆர்.இளங்கோ, கிரிராஜன், அப்துல்லா உள்ளிட்ட 6 பேரும் மற்றும் மற்ற கட்சிகளைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களான சுஷ்மிதா தேவ், டோலாசென் உள்பட 19 பேர் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது பேசிய திருச்சி சிவா, ''தொடர்ந்து ஒருவார காலமாக குரலெழுப்பி இன்று கொஞ்சம் எல்லைமீறி திமுகவிலிருந்து 6 பேர் என மொத்தம் 19 உறுப்பினர்களை இதுவரை இல்லாத அளவிற்கு சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். எதிராக குரல் கொடுப்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ரொம்ப கவனமாக இருக்கிறார்களே தவிர எங்கள் குரலை கேட்கவில்லை. இதுகுறித்து கேள்வி எழுப்பினால் அரசாங்கம் ஏன் ஓட வேண்டும். நல்ல ஆட்சி நடத்துகிறார்கள், நிர்வாகம் சரியாக இருக்கிறது என்றால் விளக்கம் சொல்ல வேண்டியது தானே. பிரதமரும் நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை, தொடர்புடைய அமைச்சர்களும் விளக்கம் தருவதில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் கூக்குரல் இடுகிறார்கள், அவையை நடத்தவிடாமல் இடையூறு செய்கிறார்கள் என தவறான ஒரு மாயையைப் பரப்புகிறார்கள்'' என்றார்.