அண்ணாமலை பரபரப்பிற்காக கவன ஈர்ப்பிற்காக பேசுகிறார். பலமுறை ஊழல் பட்டியல் தயார் தயார் என்று சொன்னார். இதுவரை வெளியிடவில்லை. என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். “பொது சிவில் சட்டம் கொண்டு வருவது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. மதச்சார்பின்மைக்கு எதிரானது. பெரும்பான்மை வாதத்தின் அடிப்படையில் ஜனநாயகம், அரசு ஆட்சி இயங்கும்பொழுது சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதிப்படுத்துவதுதான் உண்மையான ஜனநாயகம் என அம்பேத்கர் கூறியுள்ளார். சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்துவதுதான் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சி.
பொது சிவில் சட்டத்தை தனிநபர் மசோதாவாக அறிமுகப்படுத்தி இருந்தாலும் அது ஆர்எஸ்எஸின் செயல் திட்டம்தான் என்பதை அனைத்துத் தரப்பும் புரிந்து கொள்ளவேண்டும்.
குஜராத் தேர்தல் முடிவு பாஜகவிற்கு சாதகமாக அமைந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி வாக்குகளைப் பிரித்துள்ளது. பாஜக வெற்றி பெற்றதைவிட எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறியதுதான் கவலைக்குரியது. 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறாமல் இருக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது. குஜராத்தில் அவர்கள் பெற்றிருக்கும் வெற்றி நாட்டுக்கு நல்லதல்ல. ஜனநாயகத்திற்கு இது நல்ல அறிகுறி இல்லை.
அண்ணாமலை பரபரப்பிற்காக கவன ஈர்ப்பிற்காகப் பேசுகிறார். எந்நேரமும் விளம்பர வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்பதற்கான வேட்கையோடு பேசுகிறார். பலமுறை ஊழல் பட்டியல் தயார் தயார் என்று சொன்னார். இதுவரை வெளியிடவில்லை. ஆதாரங்களோடு வெளியிட்டால் மக்கள் ஆதரவளிக்கப்போகிறார்கள்.
திமுகவை எதிர்ப்பதன் மூலம் உண்மையான எதிர்க்கட்சி அதிமுக அல்ல பாஜக தான் எனக் கூற தொடர்ந்து முயல்கிறார். இது அதிமுக மற்றும் பாஜகவிற்கு இடையேயான இரண்டாவது இடத்தில் யார் என்பதை உறுதிப்படுத்த அதிகாரப் போட்டியாகத்தான் தெரிகிறது” என்றார்.