புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த பாகூர் எம்.எல்.ஏ தனவேலு காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்தும், முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறி ஊடகங்களுக்கு பேட்டியளித்ததுடன் ஆளுநர் கிரண்பேடியிடமும் புகார் அளித்தார்.
அதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் நமச்சிவாயம் தனவேலுவை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குவதாக தெரிவித்தார்.
அதுபற்றி அவர் கூறியதாவது:-
" தொடர்ந்து கட்சிக்கு விரோதமான நடவடிக்கைகளிலும், ஆட்சியை கவிழ்க்கும் சதிச்செயலிலும் ஈடுபட்டு வந்த பாகூர் எம்.எல்.ஏ தனவேலு பற்றி அகில இந்திய தலைமையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி யார் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டாலும் கட்சி அதை வேடிக்கை பார்க்காது. அதன்படி கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட பாகூர் எம்.எல்.ஏ கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார்.
இதற்கு பதிலளித்த தனவேலு, " நான் கட்சியை பற்றி எதுவும் தவறாக கூறவில்லை. அமைச்சர்கள் செய்யும் தவறுகளை தான் விமர்சித்தேன். என் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் உயிர் காக்கும் மருந்துகள் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என எனது தொகுதி மக்களை திரட்டி கவன ஈர்ப்பு போராட்டம் செய்தேன்.
இதனால் கோபமுற்ற முதல்வர், அமைச்சர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து என்னை முடக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றனர். இதற்கு எல்லாம் சற்றும் அஞ்சாமல் எதையும் எதிர் கொள்வேன். எனது தொகுதி மக்கள் நலனுக்காக இன்னும் உத்வேகத்தோடு வீதியில் இறங்கி போராடுவேன்" என்றார்.
இதனிடையே 'ஆட்சியின் பெரும்பான்மையை நிருபிக்க சட்டமன்றத்தை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும்' என அதிமுக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், " புதுச்சேரியில் காங்-திமுக கூட்டணியில் உச்சக்கட்ட கோஷ்டி மோதல் நடக்கிறது. அரசு மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்த தனவேலு எம்எல்ஏ விவகாரம் உட்கட்சி விவகாரம். இருப்பினும் சட்டமன்ற உறுப்பினரான அவர் அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளதால் பெரும்பான்மையை இழந்து விட்டது. முதல்வர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டூம். ஆட்சியின் பெரும்பான்மையை நிருபிக்க சட்டமன்றத்தை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
ஆளும் கட்சி எம்.எல்.ஏ ஒருவரே ஆட்சியையும், அமைச்சர்களையும் விமர்சிப்பதும், அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.