பிரபல நடிகை கௌதமி சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில், கடந்த மாதம் தனது ரூ. 25 கோடி மதிப்பிலான சொத்துகளை பாஜகவைச் சேர்ந்த அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து அபகரித்துவிட்டதாகப் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் நடிகை கௌதமி, 25 ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்திருக்கிறேன்; ஆனால் கட்சி எனக்குத் துணை நிற்கவில்லை என்று கூறி பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் கௌதமி விலகியது வருத்தமளிப்பதாக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகக் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கௌதமி மீது எனக்கு அதிகளவு அன்பும், மரியாதையும் இருக்கிறது. அவர் கட்சிக்காகத் தீவிரமாக உழைக்கக்கூடிய பெண்மணி. நான் மூன்று வருடத்திற்கு முன்பு கூட கௌதமியைத் தேசிய அளவில் மகளிர் அணியில் இணைந்து பணியாற்றுவதற்காக அழைப்பு விடுத்திருந்தேன். ஆனால் கௌதமி மாநில அளவிலே வேலை செய்து கொள்கிறேன் என்று தெரிவித்தார். அதன் பிறகு மாநில அளவில் சில நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார்.
எனக்கு மாநில அளவிலான வேலைகள் இல்லதால் கௌதமியைச் சரிவரப் பார்க்கவோ, பேசவோ நேரம் இல்லாமல் இருந்தது. கடந்த மாதம் கூட கௌதமிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். தான் ஒரு நடிகை என்று நினைக்காமல் கட்சியின் அடிமட்ட தொண்டராக பணியாற்றியனார். தற்போது அவரின் கடிதம் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. கௌதமி எதிலும் சோர்ந்து போகக்கூடிய ஆளில்லை; தன்னம்பிக்கையும், தைரியமும் உள்ள பெண். 10 நாட்களுக்கு முன்பு ஒரு வழக்கு தொடர்பாக அவரது உதவியாளர் எனக்கு, கட்சியில் சிலர் கௌதமிக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்று மெஜேஜ் அனுப்பியிருந்தார். நானும் அதைப் பற்றித் தெரியவில்லை; முழுமையான தகவல் கொடுங்கள் உதவி செய்கிறேன் என்று தெரிவித்திருந்தேன். ஆனால் இன்று வெளியிட்டுள்ள அவரது அறிக்கை எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.
கட்சிக்காரர்களைச் சட்டத்திற்குப் புறம்பாக யாரையும் பாதுகாக்கப் போவதில்லை. என்ன பிரச்சனை என்று முழுமையாகக் கூறியிருந்தால் அவருக்கு உதவி செய்ய வாய்ப்பாக இருந்திருக்கும். ஆனால் ஒரு மாநில அரசிடம் புகார் கொடுத்தும் இத்தனை நாளாக நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக அரசு பாஜகவில் இருந்ததால் கௌதமி கொடுத்த புகாரை எடுக்கவில்லை. ஆனால் இன்று கட்சியில் இருந்து விலகியவுடன் புகார் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். மீண்டும் கௌதமிக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்” என்றார்.