![pmk palu talk about jayakumar and admk issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/Sy4Zv7xz2sV3RfyhsAQLGmBvrM24QrjuZaJbnklstms/1672739403/sites/default/files/inline-images/995_242.jpg)
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிமுக 4 அணிகளாகப் பிரிந்துள்ளது எனக் கூறியிருந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக தான் அன்புமணியை அடையாளம் காட்டியது. தற்போது அதிமுகவை தவறாகப் பேசுவது சரியல்ல” எனப் பேசியிருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்துப் பேசிய பாமக செய்தித்தொடர்பாளர் பாலு, “அதிமுகவால் தான் பாமகவைச் சேர்ந்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆனார்கள் என்று ஜெயக்குமார் சொல்வதை வழக்கமாக வைத்து வருகிறார். அவர் கடந்த 1996 தேர்தலைத் திரும்பிப் பார்க்க வேண்டும். ஆட்சியில் இருந்த அவர்களும் 4 தொகுதியில் தான் வெற்றி பெற்றிருந்தார்கள், நாங்களும் நான்கு தொகுதிகளில் தான் வெற்றி பெற்றிருந்தோம்.
1998 இல் அதிமுக மிகவும் பலவீனமடைந்து இருந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேனாம்பேட்டையில் உள்ள எங்கள் அலுவலகத்திற்கு வந்து கூட்டணி அமைத்து, பின்பு அதன் காரணமாகத்தான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்கள். எப்போதெல்லாம் அதிமுக பலவீனமடைந்து உயிர் போகும் நிலையில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் அவர்களுக்கு பாமகவினர் உயிரூட்டுபவர்களாக விளங்கியிருக்கிறோம்.
அதேபோன்று, 2001 ஆம் ஆண்டு பாமகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஜெயலலிதா வழி மேல் விழி வைத்து எங்கள் தலைவர் மருத்துவர் ராமதாஸுக்காக காத்திருந்தார். அதற்குப் பிறகுதான் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தது. அப்படி இருக்கும் சூழலில், எங்களால் தான் ஜெயலலிதா முதல்வரானார், எங்களால்தான் எடப்பாடி பழனிச்சாமி 2 ஆண்டுகள் முதல்வராகத் தொடர முடிந்தது, எங்களால் தான் ஜெயக்குமார் 2 ஆண்டுகள் அமைச்சராகத் தொடர முடிந்தது என்று நாங்கள் ஒருபோதும் சொல்லிக் கொள்வதில்லை. அது எங்களுடைய வேலையும் அல்ல. ஆனால், ஜெயக்குமார் பாமக மீது விமர்சனங்களை வைக்கும் போது கடந்த காலத்தில் எங்களின் பங்களிப்பினைப் புரிந்து கொண்ட கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.
கடந்த 2006 இல் நடந்த தேர்தலில் திமுக 96 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது. பாமக 18 இடங்களைப் பெற்றது. அந்த சமயத்தில் எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக திமுகவிற்கு ஆதரவு அளித்தோம். கலைஞர் முதல்வரானார். ஆனால், எங்களால் தான் கலைஞர் முதல்வரானார் என்று ஒருபோதும் நாங்கள் சொன்னது கிடையாது. பொதுக்குழுவில் நாங்கள் விவாதிக்கும் கருத்துக்கள் எங்கள் கட்சியின் நலம் சார்ந்ததாக இருக்கும்.
அதிமுக பிளவுபட்டிருக்கிறது என்று சொல்லக்கூடிய நேரத்தில், அது குறித்து அன்புமணி ராமதாஸ் விளக்கிய பிறகும், ஜெயக்குமார் இப்படிப் பேசுவது தவறானது. ஒரு செய்தித்தொடர்பாளர் எதைச் சொல்ல வேண்டும் என்பதை விட, எதைச் சொல்லக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஜெயக்குமார் சொன்னதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது அவரது சொந்தக் கருத்தாகப் பார்க்கிறோம். ஆனால், அதற்கான விளக்கத்தை அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளர் இ.பி.எஸ். கொடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.