உலகை அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றுநோய் 170 நாடுகளில் பரவி 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 31 ஆயிரம் பேர் இறந்திருக்கிறார்கள். இந்தியாவில் 1,251 பேர் பாதிக்கப்பட்டு 32 பேர் பலியாயிருக்கிறார்கள். தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67. நேற்று ஒரே நாளில் 17 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் உயிரிழந்திருக்கிறார். வரலாறு காணாத வகையில் கடுமையான பாதிப்பை இந்தியா சந்தித்து வருகிறது. இதனால் ஏற்படப்போகிற விளைவுகள் குறித்து மிகுந்த தீவிர தன்மையோடு இப்பிரச்சினையை மத்திய, மாநில அரசுகள் கையாள வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் காரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சிங்கப்பூரில் 3 அடி இடைவெளிக்கும் குறைவாக எவரேனும் நெருங்கி வந்தால், அவரைக் கைது செய்து 6 மாதங்கள் வரை சிறையில் அடைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறதாம். இத்தகைய கடுமையான நடவடிக்கைகளின் மூலம் தான் அந்நாடு 3 உயிரிழப்புகளுடன் கொரோனாவைக் கட்டுப்படுத்தியுள்ளது என்றும், மருத்துவத் தேவைக்கான உதவி எண் 104-ல் அழைக்கும் மக்களின் வீடுகளுக்குச் சென்று கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களைச் சோதிக்கும் மருத்துவர்களுக்கு வைரஸ் தொற்றும் ஆபத்து உள்ளது. அதனால், அவர்களுக்கு N-95 முகக் கவசங்களை வழங்க வேண்டும் என்றும், N-95 முகக் கவசங்களை சுழற்சி முறையில் பயன்படுத்த முடியும் என்பதால் கொரோனா சோதனைப் பணியில் ஈடுபடும் ஒவ்வொரு மருத்துவருக்கும் குறைந்தது 4 கவசங்களை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.