![chennai high court](http://image.nakkheeran.in/cdn/farfuture/KnAeuiWFFuHrDFfZkOqxWNexufSmYNUCWo-5-XmZH0k/1597254823/sites/default/files/inline-images/chennai%20high%20court%20650_6.jpg)
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை எதிர்த்து தீபக் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை, அடுத்த வாரத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றவும், அதை அரசு கையகப்படுத்தவும் நடவடிக்கை எடுத்தது. இடத்துக்கு 68 கோடி ரூபாய் இழப்பீடு நிர்ணயித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நிலத்தை அரசுடைமை ஆக்கியதாக அரசு அறிவித்தது.
இதற்கிடையில், வேதா நிலையத்தைக் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தீபக் தரப்பிலும், இழப்பீடு நிர்ணயித்ததை எதிர்த்து தீபா தரப்பிலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த இரு வழக்குகளையும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற தனி நீதிபதி பரிந்துரைத்திருந்தார். இந்நிலையில், தீபக் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தீபா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து, தீபா வழக்கு பட்டியலிட்டபின், இரு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்கலாம் எனக் கூறி, தீபக் தாக்கல் செய்த வழக்கை அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.