பரந்தூர் பன்னாட்டு விமான நிலையம் அப்பகுதி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் துவங்கியது. கூட்டம் துவங்கியது முதலே திமுக கூட்டணிக் கட்சிகள் ஆளுநருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். ஆளுநர் உரையாற்றும்போது அரசு தயாரித்த உரையை முழுமையாகப் படிக்காமல் சில வார்த்தைகளைத் தவிர்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படவிருக்கும் திட்டங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு பரந்தூர் பன்னாட்டு விமானநிலையம் குறித்தும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பரந்தூர் பன்னாட்டு விமான நிலையம் குறித்து ஆளுநர் உரையில், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் பன்னாட்டு விமானநிலையம் அமைப்பதற்கு மாநில அரசு ஆயத்தப் பணிகளை செய்து கொண்டு வருகிறது. இது மாநிலத்தில் அதிகரிக்கும் விமான போக்குவரத்து தேவைகளை நிறைவு செய்யும். மேலும், அப்பகுதி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது வழிவகுக்கும்” எனக் கூறப்பட்டுள்ளது.