ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றி வெற்றிபெற வேண்டும் எனக் கட்சி நிர்வாகிகளை ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். அறிவுறுத்தியுள்ளனர்.
சசிகலா நாளை மறுநாள் (08/02/2021) தமிழகம் வரவுள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒற்றுமையோடு தேர்தல் பணியாற்றி, வெற்றியை ஈட்டுவது குறித்து ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினர். ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் வகையில் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும். எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் மக்களுக்காகவே அ.தி.மு.க. இயங்கும் என்ற ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுவோம் அ.தி.மு.க. அரசின் சாதனைகளைப் பிரச்சாரம், துண்டுப் பிரசுரங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.