Skip to main content

ஆட்சியாளர்களின் பித்தலாட்டம்! வெளிமாநிலத் தொழிலாளர்கள் தவிப்பு! 

Published on 09/05/2020 | Edited on 09/05/2020

 

ggg


இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலுமுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள், தங்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால், மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளவில்லை. கால்நடையாகத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களை நோக்கி கூட்டம் கூட்டமாக நடக்கத்துவங்கினர். இந்த அவலம் பல அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் ஆட்சியாளர்களின் நிர்வாக லட்சனத்தை வெளிப்படுத்துவதாகவும் இருந்தன. 

இந்த நிலையில், வெளிமாநிலத் தொழிலாளர்களுக்காக ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்துகளைத் துவங்குவதாக அறிவித்த மத்திய அரசு, பயணக் கட்டணத்தைக் கொடுக்க வேண்டும் எனவும் சொல்லியது. இந்த மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்த காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, "வெளி மாநிலத் தொழிலாளர்களின் பயணக் கட்டணத்தைக் காங்கிரஸ் கட்சி ஏற்கும்" என அறிவித்தார். 
 

இந்தியா முழுவதும் காங்கிரஸ் மீதும் சோனியா மீதும் இது நல்ல இமேஜை உருவாக்கிய நிலையில், சுதாரித்துக்கொண்ட மத்திய அரசு, "வெளி மாநிலத் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்குரிய பயணக் கட்டணத்தில் 85% மத்திய அரசும், 15% மாநில அரசும் ஏற்கும்" என அவசரம் அவசரமாக அறிவித்தது.  
 

தமிழக அரசும் இதனை ஏற்றுக்கொண்டது. உடனே, பயணத்திற்குரிய டோக்கனைப் பெற்றுக்கொள்ள பதிவு செய்துகொள்ளுங்கள் எனவும், அதற்குரிய செயலியையும் அறிவித்தது. அதன்படி வெளிமாநிலத் தொழிலாளர்கள் பதிவு செய்தனர். ஓரிரு நாள் மட்டுமே அவர்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஆட்சியாளர்கள், தற்போது கைவிட்டுவிட்டனர். 
 

இது குறித்த தகவல்கள் நமக்குக் கிடைத்த நிலையில், அது பற்றி நாம் விசாரித்த போது, "சென்னையில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பதிவு செய்திருக்கிறார்கள். நான்கு நாட்கள் ஆகியும் அவர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கவில்லை தமிழக அரசு. இதற்கு மாறாக, சென்னையில் தொழிலாளர்கள் இருக்கும் பகுதியிலுள்ள அனைத்து காவல் நிலையத்துக்கும் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. 
 

bbbb


அதன்படி, எந்த நிறுவனத்தில் தொழிலாளர்கள் வேலை பார்த்தார்களோ அந்த நிறுவனமே தனியார் பேருந்துகளை ஏற்பாடு செய்து வெளிமாநிலத் தொழிலாளர்களை அனுப்பி வைக்க வேண்டும். அதற்குரிய செலவுகளைச் சம்மந்தப்பட்ட நிறுவனமே ஏற்க வேண்டும் எனக் காவல்துறையினர் சம்மந்தப்பட்ட நிறுவனத்தினரை வலியுறுத்தியுள்ளனர். இதனால் நிறுவனத்தினரும் தொழிலாளர்களும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். காவல்துறை மூலம் தமிழக அரசு எடுக்கும் இந்த நடவடிக்கை தொழிலாளர்களிடம் கோபத்தை உருவாக்கியிருக்கிறது. வெளிமாநிலத் தொழிலாளர்களின் பயணக் கட்டணத்தை அரசு ஏற்கும் என்பது பித்தலாட்டத் தனம்! என்கிறார்கள் தன்னார்வத் தொண்டு அமைப்பினர்.


 

சார்ந்த செய்திகள்