நாகப்பட்டிணம் மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ளது கருப்பம்புலம் ஊராட்சி. இந்த ஊராட்சியின் வரவு செலவு அறிக்கையை துண்டு பிரசுரமாக வீடு வீடாக விநியோகம் செய்துள்ளார் ஊராட்சி மன்ற தலைவர்.
கருப்பம்புலம் ஊராட்சிமன்ற தலைவராக இருப்பவர் இரா.சுப்புராமன். இவர் பதவியேற்ற பிறகு கட்டிட பராமரிப்பு, குடிநீர், மின்சாரம் வரவு செலவு அறிக்கையை துண்டு பிரசுரமாக பொதுமக்களுக்கு கொடுத்துள்ளார். கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான மொத்த வரி வசூல், வரவு எவ்வளவு, செலவு எவ்வளவு என விவரமாக வரவு செலவு அறிக்கையை வீடு வீடாக சென்று கொடுத்துள்ளார்.
கருப்பம்புலம் ஊராட்சிமன்ற தலைவரான இரா.சுப்புராமனை சந்தித்து பாராட்டியுள்ளார் அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் மூ.ராஜேஸ்வரி பிரியா.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூ.ராஜேஸ்வரி பிரியா, அரசியலுக்கு படித்த இளைஞர்கள் வரவேண்டும் என்று மேடைக்கு மேடை நாங்கள் பேசுவதற்கான காரணம் நேர்மையான அப்பழுக்கற்ற நிர்வாகம் உருவாக வேண்டும் என்பதற்காகத்தான்.
அதன் அடிப்படையில் ஊராட்சிமன்ற தலைவர் பதவி ஏற்று 8 மாதங்கள் முடிவுற்ற நிலையில் கிராம வரவு செலவு கணக்குகளை வெள்ளை அறிக்கையாக கிராமத்தில் உள்ள அனைவரின் வீட்டு வாசலுக்கு கொண்டு சேர்த்த பெருமைக்குரிய கருப்பம்புலம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமனை சந்தித்து பாராட்டு தெரிவித்தேன். எம்.சி.ஏ. படித்த அவர் கிராம ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறப்பாக பணியாற்றி வருகிறார். சுப்புராமனை முன்னுதாரணமாக வைத்து படித்தவர்கள் இதுபோன்று நேர்மையாக பணியாற்ற வரவேண்டும் என்றார்.