தமிழக அரசின் சொத்துவரியை உயர்த்தும் முடிவைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அதன்படி, சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை அதிகரிக்க உள்ளது.
இந்நிலையில் சொத்து வரி உயர்வை உடனே திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.
அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு மக்கள் விரோத அரசாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. சொத்துவரி உயர்வால் மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். இந்தக் கண்ணீர் திமுக அரசை படுபாதாளத்தில் தள்ளும். மக்களின் இந்தக் கண்ணீருக்கு திமுக அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும். நாங்கள் வந்தால் முதல் கையெழுத்திலேயே நீட்டை ரத்து செய்வோம் என்கிறார்கள். ஆனால், செய்யவில்லை. மக்களை வாட்டி வதைக்கக்கூடிய வரிகளைத்தான் திணித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சொத்து வரியை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டம் வெடிக்கும்" என எச்சரித்தார்.