தேனி மாவட்டத்திலுள்ள ஒரு தொகுதியில் இரண்டாவது முறையாக களமிறங்கியுள்ள துணை முதல்வர் ஓபிஎஸ்’சின் வேட்புமனுவில் கொடுத்த தகவல்படி, அவர் மற்றும் அவரது மனைவியின் சொத்து மதிப்புப் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில், அ.தி.மு.க சார்பில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார் ஓ.பன்னீர் செல்வம். இதற்காக, கடந்த 12ஆம் தேதி மதியம், போடி தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார் ஓ.பி.எஸ்.
அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில், அவரது சொத்து விவரங்கள் ஏதும் இடம்பெறவில்லை. இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கேட்டபோது, “வேட்புமனு தாக்கல் செய்ய கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் சொத்துப் பட்டியலை தாக்கல் செய்யலாம்” என்றனர். அதன்படி, ஓரிரு நாட்களில், ஓ.பி.எஸ் தனது சொத்துப்பட்டியலை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில், நேற்று (16.03.2021) தனது சொத்துப்பட்டியலை தாக்கல் செய்தனர் ஒபிஎஸ் மற்றும் அவரது மனைவி விஜயலெட்சுமி.
அதில் அசையும் சொத்து விவரங்கள்: “ஓ.பன்னீர்செல்வத்திடம் கையில் ரொக்கப் பணமாக 23,500 ரூபாயும், அவரது மனைவி விஜயலெட்சுமியிடம் 3,82,500 ரூபாயும் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் பெயரில் உள்ள மூன்று வங்கிக் கணக்குகளில், வைப்புத்தொகையாக 11,42,698 ரூபாயும், அவரது மனைவி விஜயலெட்சுமி பெயரில் உள்ள இரண்டு வங்கிக் கணக்குகளில் வைப்புத்தொகையாக 23,98,824 ரூபாய் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த ஒரு நிறுவனத்துக்கோ அல்லது தனி நபருக்கோ ஓ.பன்னீர்செல்வம் கடனாக பணம் கொடுக்கவில்லை என்றும், அவரது மனைவி விஜயலெட்சுமி, தனது கணவர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு 65,55,411 ரூபாயும், தனது இளைய மகன் ஜெயபிரதீப்பிற்கு 3,12,30,803 ரூபாயும் கடனாக கொடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தனது கணவருக்கும், மகனுக்கும் சேர்த்து விஜயலெட்சுமி கொடுத்துள்ள மொத்த தொகை, 3,77,86,214 ரூபாய். ஓ.பி.எஸ்’சிடம் 67,440 ரூபாய் மதிப்புள்ள 16 கிராம் தங்கம், வெள்ளி நகைகளும், அவரது மனைவியிடம் 8,43,000 ரூபாய் மதிப்புள்ள 200 கிராம் தங்கம், வெள்ளி நகைகளும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவரின் மொத்த அசையும் சொத்து மதிப்பாக, 61,19,162 ரூபாயும், அவரது மனைவி விஜயலெட்சுமியின் மொத்த அசையும் சொத்து மதிப்பாக 4,57,52,415 ரூபாயும் உள்ளதாக சொத்துப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்னென்ன வாகனங்கள் உள்ளன? ஒபிஎஸ்சிடம் 5,54,980 ரூபாய் மதிப்புள்ள மஹிந்திரா ஜினியோ எல்.ஜி.வி 2011 மாடல் காரும், 17,85,655 ரூபாய் மதிப்புள்ள டொயோடா இன்னோவா 2013 மாடல் காரும், 25,44,789 ரூபாய் மதிப்புள்ள டொயோடா இன்னோவா 2016 மாடல் காரும் என மொத்தம் 48,85,424 ரூபாய் மதிப்புள்ள மூன்று கார்கள் ஓ.பன்னீர் செல்வத்திடம் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், அவரது மனைவி பெயரில், மொத்தம் 43,34,377 ரூபாய் மதிப்புள்ள இரண்டு டெம்போ டிராவலர் வாகனம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.