தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஓபிஎஸ் இருக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு சபாநாயகர் அப்பாவு பதில் அளித்தார்.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தொடர்பாக சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2023-24 நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட், மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும். மேலும், வேளாண் நிதிநிலை அறிக்கை எப்பொழுது தாக்கல் செய்வார்கள் என்பன குறித்தும் அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும். மார்ச் 28 ஆம் தேதி முன்பண மானியக் கோரிக்கையும் கடந்த ஆண்டுக்கான கூடுதல் செலவின மானியக் கோரிக்கையும் தாக்கல் செய்வார்கள். இதனைத் தவிர அனைத்து முடிவுகளும் அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும்.” என்றார்.
தொடர்ந்து அவரிடம் அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எப்போதாவது நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்த உடன் நான் தீர்ப்பு வழங்குவேன் என சொல்லியுள்ளேனா... சட்டமன்றத்தில் அந்த பிரச்சனை பேசி இறுதி முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே இருந்தது போல் ஓபிஎஸ், இபிஎஸ் அருகருகே இருப்பார்கள் என நான் சொல்லவில்லை. சட்டமன்றத்தின் முன் அவர்கள் எப்படி அமர்வார்கள் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. அதன்படி நடக்கும். சட்டமன்றம் என் ஆளுகைக்கு உட்பட்டது. அதில் யாரை எங்கு உட்கார வைக்க வேண்டும் என்பது என் உரிமை. அதில் சட்டமன்றத்தில் தகுதியான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் முன்னாள் முதல்வர் என்பதன் அடிப்படையில் முன்னால் இடம் கொடுக்கப்பட்டதா எனக் கேட்கிறார்கள். ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டது தான்” எனக் கூறினார்.