Skip to main content

மனைவிக்குக் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய கணவர்!

Published on 09/05/2024 | Edited on 09/05/2024
husband built a temple for his wife and performed Kumbabhishekam

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ளது தேவாமங்கலம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவர் திருப்பூர் பகுதியில் சொந்தமாக பின்னலாடை கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இதில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவருக்கும் கற்பகவல்லி என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஐந்து வயதில் ஆண் பிள்ளை உள்ளது.

கற்பகவள்ளிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். அதில் அவருக்கு கிட்னி பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரை நல்ல மருத்துவமனையில் வைத்து அவரது கணவர் கோபாலகிருஷ்ணன் அவ்வப்போது சிகிச்சை அளித்து வந்துள்ளார். இந்த நிலையில் கற்பகவள்ளியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இது குறித்து மனைவியிடம் பாசமுடன் கோபாலகிருஷ்ணன் பேசும் போது, “உன்னை எப்படியும் காப்பாற்றுவேன்; அப்படி ஒருவேளை உன்னை காப்பாற்ற முடியாவிட்டால் உன் உடல் அடக்கம் செய்த இடத்தில் உனக்கு ஒரு கோவில் கட்டி உன்னை தெய்வமாக வணங்குவேன்..” என்று மனைவிக்கு ஆறுதல் கூறி வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி  கற்பகவல்லி சமீபத்தில் உயிரிழந்தார்.

husband built a temple for his wife and performed Kumbabhishekam

இதையடுத்து அவரது உடலை தனது சொந்த இடத்தில் கோபாலகிருஷ்ணன் உறவினர்கள் உதவியுடன் அடக்கம் செய்தார். அந்த இடத்தில் சுமார் ஐந்து லட்ச ரூபாய் செலவு செய்து நவீன முறையில் ஒருகோயிலை எழுப்பி, உறவினர்கள், ஊர் மக்கள் ஒத்துழைப்போடு வேத மந்திரங்கள் ஓதி நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார். கோவிலுக்குள் மனைவியின் புகைப்படத்தை வைத்து தீபாரதனை காட்டப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டது. தற்போது தனது மனைவி உடல் அடக்கம் செய்த இடத்தில் எழுப்பப்பட்டுள்ள கோவிலில் தினசரி அணையாவிளக்கு எரிவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். அத்தோடு விசேஷ நாட்களில் ஆலயத்தில் பூஜைகள் நடப்பதற்கும் ஏற்பாடு செய்துள்ளார்.

தன் பிரியமான மனைவி மறைந்த பிறகு அவருக்கு கோவில் கட்டி அதை நினைவு சின்னமாக வழிபட்டு வரும் கோபாலகிருஷ்ணனின் செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்