Skip to main content

ராகுல், பிரியங்கா காந்திக்கு ஸ்மிருதி இராணி சவால்!

Published on 09/05/2024 | Edited on 09/05/2024
Smriti Irani challenge to Rahul, Priyanka Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில், முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று 102 இடங்களுக்கும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி அன்று 89 தொகுதிகளுக்கும் மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதி அன்று 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தல்களை எதிர்கொண்டு பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாக்கு சேகரித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து பிரியங்கா காந்தி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “நரேந்திர மோடி தனது நண்பர்களின் ரூ.16 லட்சம் கோடியைத் தள்ளுபடி செய்தார் ஆனால், விவசாயிகளின் ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யவில்லை. இதற்கு நரேந்திர மோடி பதில் சொல்ல வேண்டும். பயனற்ற பிரச்னைகளை பற்றி மட்டுமே பிரதமர் மோடி பேசுகிறார். வேலை வாய்ப்பு, பண வீக்கம், பெண்கள் மீதான அட்டூழியங்கள் ஆகியவற்றை பற்றியும் பேசுமாறு அவருக்கு நான் சவால் விடுகிறேன்” என்று கூறினார். 

Smriti Irani challenge to Rahul, Priyanka Gandhi

இந்த நிலையில், ராகுல் காந்திக்கும், பிரியங்கா காந்திக்கும், மத்திய அமைச்சரும், அமேதி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான ஸ்மிருதி இராணி சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “பா.ஜ.க.வுடன் விவாதம் செய்ய எந்தச் சேனல், தொகுப்பாளர், இடம், நேரம் மற்றும் பிரச்சினையை தேர்வு செய்யுமாறு நான் அவர்களுக்கு (பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி) சவால் விடுகிறேன். ஒரு பக்கம், அண்ணன்-தங்கை ஜோடி இருக்கும். மறுபுறம், பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் இருப்பார். எல்லாம் தெளிவாக இருக்கும். எங்கள் கட்சியில இருந்து சுதான்ஷு திரிவேதியே போதும். அவர்களுக்கு பதில் கிடைக்கும்” என்று கூறினார். 

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி இராணி அதிகபட்ச வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். இந்த முறை நடைபெறுகின்ற மக்களவைத் தேர்தலில், ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்