Skip to main content

நெருக்கடியில் இபிஎஸ்; எதிர்த்தரப்பினர் ஆலோசனை; முடங்கப்போகிறதா இரட்டை இலை?

Published on 20/01/2023 | Edited on 20/01/2023

 

OPS Consulting; Palaniswami in crisis

 

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக  அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 31ல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, பிப்ரவரி 7 நிறைவடைகிறது. வாக்குப்பதிவு பிப்ரவரி 27 ஆம் தேதி என்றும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி எனவும் தேர்தல் அறிவிப்பு வந்துள்ளது. 

 

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில், பாஜக - அதிமுக கூட்டணியில், ஈரோடு கிழக்கு தொகுதி கூட்டணியில் இருந்த மற்றொரு கட்சியான தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டது. தமாகா சார்பில் போட்டியிட்ட யுவராஜ் 8904 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவித்ததையொட்டி, தமாகா போட்டியிடும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த தொகுதியில் அதிமுகவே நேரடியாகப் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுக சார்பில் கே.வி.ராமலிங்கத்தைக் களமிறக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

ஈரோடு இடைத்தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில், அதிமுகவின் மற்றொரு தரப்பான ஓ.பன்னீர்செல்வமும் தனது ஆதரவாளர்களுடன் ஈரோடு இடைத்தேர்தல் குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார். வரும் 23 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளார்.

 

இந்நிலையில், ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகராக பொறுப்பு வகிக்கும் பண்ருட்டி ராமச்சந்திரனை இன்று அவர் சந்தித்துள்ளார். சென்னை அசோக் நகரில் இருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரனை அவரது இல்லத்தில் வைத்து ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார். இச்சந்திப்பில் ஓபிஎஸ் அணியின் ஆதரவாளர்களும் கலந்துகொண்டுள்ளனர். 

 

ஈரோடு இடைத்தேர்தலில் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் வேட்பாளர்களைக் களமிறக்கும் சூழலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஓபிஎஸ், பண்ருட்டி ராமச்சந்திரன் சந்திப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்