சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று (11/07/2022) காலை 09.00 மணிக்கு அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் வந்துள்ளனர். அதேபோல், அ.தி.மு.க. தொண்டர்கள் அதிகளவில் திருமண மண்டபம் முன்பு குவிந்துள்ளனர்.
இந்த நிலையில், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து மந்தைவெளி சாலை வழியாக பொதுக்குழு நடைபெறவுள்ள திருமண மண்டபத்திற்கு பிரச்சார வாகனத்தில் வந்து கொண்டிருக்கிறார். வழிநெடுகிலும் அ.தி.மு.க. தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் வகையில் திருமண மண்டபம் செல்லும் வழிநெடுகிலும் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு தடைகோரிய ஓ.பன்னீர்செல்வத்தின் வழக்கின் தீர்ப்பு இன்று (11/07/2022) காலை 09.00 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதில், அதிமுக பொதுக்குழுவை நடத்த எந்தத் தடையும் இல்லை எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காலை, சென்னையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களைச் சந்தித்தார். அதைத் தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டுச் சென்று அங்கு அலுவலகத்தை தனது ஆதரவாளர்களுடன் கைப்பற்றினார்.
அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.