நடிகர் விவேக் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான், கரோனோ தடுப்பூசி குறித்தும், அரசியல்வாதிகள் குறித்தும், அரசு குறித்தும் சில கருத்துக்களை தெரிவித்தார்.
அவரது பேச்சு சோஷியல் மீடியாக்களில் வைரலானது. அவரது பேச்சு பலராலும் கவனிக்கப்பட்டு, பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் மீது வடபழனி காவல் நிலையத்தில் சென்னை மாநகர ஆணையர் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில், மன்சூர் அலிகான் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். “பேட்டி கொடுக்கும்போது பேசுனத தப்பா புரிஞ்சுக்கிட்டாங்கப்பா. ஏதாவது வழி இருக்கான்னு பாருங்க. முன்ஜாமீன் வாங்குங்க” என்று கூறினாராம். இதையடுத்து வழக்கறிஞர்கள், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், “எனது பேட்டியை மாநகராட்சி ஆணையர் தவறாகப் புரிந்துகொண்டார். உள்நோக்கத்தோடு வேண்டுமென்று தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பவில்லை. எதேச்சையாக பேட்டியில் வெளிப்பட்ட கருத்து, தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறினேனே தவிர, தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை” என்று கூறியுள்ளார். மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரிய மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.