மாநில அரசின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக ஆளாத மாநில முதல்வர்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.
இந்த சந்திப்பை தொடர்ந்து தமிழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின், கெஜ்ரிவால், பகவந்த் சிங் மான் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''டெல்லிக்கு செல்லும்போதெல்லாம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நான் அடிக்கடி சந்திப்பேன். டெல்லி துணைநிலை ஆளுநர் மூலம் ஆளும் அரசுக்கு தொடர்ந்து தொல்லைகள் தரப்பட்டு வருகின்றன. மத்திய பாஜக அரசு டெல்லி அரசுக்கு தொடர்ந்து நெருக்கடிகளை கொடுத்து வருகிறது.
வரும் 12ஆம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நான் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தி தற்போது வெளிநாட்டில் இருப்பதால் 12ஆம் தேதி நடைபெறும் அக்கூட்டத்தில் அவரும் பங்கேற்பதில் சந்தேகம். மேட்டூர் அணையை திறந்து வைக்க உள்ளதால் எதிர்க்கட்சி ஆலோசனைக் கூட்ட தேதியை மாற்றக் கோரியுள்ளேன்.அகில இந்திய அளவில் இருக்கும் கட்சிகளும் டெல்லி அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும். ஜனநாயகத்தை காக்க இது போன்ற சந்திப்புகளும் ஆலோசனைகளும் மிகவும் அவசியமானது. தேர்வு செய்யப்பட்ட அரசின் அதிகாரத்தைப் பறிக்கக் கூடாது என உச்சநீதிமன்றமே தெரிவித்திருக்கிறது'' என்றார்.