தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்று பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ''நம்முடைய கலைஞர் சொன்னார் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் ஏற்றமும் ஊக்கமும் தருவது கல்வி. அதைப்போல காந்தியடிகள் சொன்னார் உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று கூறினார். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இந்திய நாட்டினுடைய எதிர்காலமே வகுப்பறையில் தான் இருக்கிறது என்று சொன்னார்.
எனவே கல்வி என்பது மிகவும் முக்கியம். அந்த கல்வியை அடிப்படையாகக் கொண்டுதான் கல்வி உதவித்தொகை எல்லாம் நம்முடைய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், மற்ற சமூகத்தைச் சேர்ந்த சீர்மரபினர், சிறுபான்மை மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. 295 கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் உள்ளது. அங்கு 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். 1,336 விடுதிகள் இருக்கிறது. இது திராவிட மாடல் அரசு. நமது முதல்வர் சொல்வதைப்போல இங்கு இருக்கக்கூடிய 88 சதவிகித மக்கள் திராவிட இன உணர்வு கொண்டவர்கள். இங்கு திராவிடத்தை சொன்னால்தான் வண்டி ஓட்ட முடியும்'' என்றார்.