தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில், தமிழக சபாநாயகரை நோக்கி கேள்விக்கணைகளை தொடுத்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
தமிழக சட்டமன்றத்தின் தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த போது, அதனை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் வாக்களித்தனர். கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயகர் தனபாலிடம் புகார் தெரிவித்தது திமுக. ஆனால், அது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை சபாநாயகர். ஒரு கட்டத்தில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேரும் அதிமுகவில் இணைந்தனர். எடப்பாடி ஆட்சியில் துணை முதல்வருமானார் ஓபிஎஸ்.
இதனைத்தொடர்ந்து திமுகவின் புகார் மனு நிரந்தரமாக கிடப்பில் போடப்பட்டது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார் திமுக கொறடா சக்கரபாணி. உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்புக்கு சாதகமான தீர்ப்பு வரவும் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் சக்கரபாணி. பல கட்ட விசாரணைகள் நடந்த நிலையில் இறுதிக்கட்ட விசாரணை நடக்காமல் நீண்டு கொண்டே போன நிலையில், ‘’ மூன்று வருடங்களாக முடிவு தெரியாமல் இருக்கும் இவ்வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் ‘’ என கடந்த வாரம் புதிய மனுவைத் தாக்கல் செய்தது திமுக. அந்த மனு மீதான விசாரணை பிப்ரவரி 4-ந்தேதி நடக்கும் என தெரிவித்தனர் நீதிபதிகள்.
இந்த சூழலில், இவ்வழக்கு இன்று (பிப்ரவரி-4) உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யகாந்த் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல்ரோத்தஹி, ‘’ இந்த வழக்கில் சபாநாயகருக்கு உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு கிடையாது. அப்படியிருக்க சபாநாயகருக்கு நீதிமன்றம் எப்படி உத்தரவிட முடியும்? சபாநாயகர் அளிக்கும் தீர்ப்பின் மீது நீதிமன்றம் தலையிட முடியுமே தவிர, அவர் முடிவெடுக்காத சூழலில் அவருக்கு எப்படி உத்தரவிட முடியும்? அதனால் இந்த வழக்கு அடிப்படை முகாந்திரமில்லாதது. குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என எந்த விதியும் கிடையாது. சபாநாயகரின் அதிகாரம் குறித்து வழக்கு அரசியல் சாசன அமர்வுதான் விசாரிக்க வேண்டும் ‘’ என வாதிட்டார்.
திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபில், ‘’ கொறடா உத்தரவை மீறிய 11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 2017-ல் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை. அவருக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் ‘’ என வாதாடினார்.
இது குறித்து விசாரித்த நீதிபதிகள், ‘’ இந்த வழக்கில் மூன்று ஆண்டுகள் காலதாமதம் தேவையில்லாதது. எப்போது அவர் நடவடிக்கை எடுக்கப் போகிறார்? தகுதி நீக்க கோரும் மனுவை நீண்ட காலம் சபாநாயகர் கிடப்பில் வைத்திருக்க முடியாது. எதற்காக இந்த கால தாமதம்? இந்த விவகாரத்தில் அனைத்து அம்சங்களையும் சபாநாயகர் ஆராய்ந்தாரா? நடவடிக்கை எடுப்பதில் என்ன சிக்கல்? ‘’ என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியதுடன், ‘’ இது குறித்து 15 நாட்களுக்குள் சட்டமன்ற பேரவை செயலர் பதில் அளிக்க வேண்டும்‘’ என சொல்லி, விசாரணையை 14-ந்தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சரமாரியான கேள்விகள் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.