புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் சார்பு நீதிமன்றம், பொன்னமராவதி மற்றும் கரம்பக்குடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறையின் நடுவர் நீதிமன்றம் திறப்புவிழா நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர், புதுக்கோடை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, “ஆளுநர் பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தெளிவான பதிலைத் தந்துள்ளார். ஆளுநர் இப்படி பேசி இருக்கக்கூடாதுதான். தன் நிலைப்பாட்டை அவர் தெளிவாகவே சொல்லியுள்ளார். அது தவறான ஒன்று என முதலமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். இப்பொழுது அவர் ஒரு அரசியல்வாதியாக வந்துவிட்டார்” எனக் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் சட்டமன்றத்தின் இறையாண்மையையும் ஆளுநர் தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருகிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தின் இறையாண்மையை மதிக்க ஆளுநர் கற்றுக்கொள்ள வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதலமைச்சருக்கு மேல் அதிகாரம் உள்ளவர் என்ற கற்பனைக் குதிரையில் பவனி வருகிறார் ஆளுநர். அரசியல் சட்டத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையை மறந்து ஆளுநர் செயல்படுகிறார் என்றும் அமைச்சர் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை ஆலோசனையின் படி ஆளுநர் செயல்பட வேண்டும் என்று பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. ஷம்ஷேர் சிங் வழக்கின் தீர்ப்பை ஆளுநர் படித்துப் பார்க்கவில்லை என்றே தோன்றுகிறது எனவும் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.