தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால், தமிழக பாஜகவிற்கு உடனடியாக புதிய தலைவரை தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் ரேசில் ஹச்.ராஜா, வானதி சீனிவாசன், கே.டி ராகவன் பெயர்கள் அடிப்பட்டு வரும் நிலையில், தற்போது அந்த பெயர்களை ஓவர்டேக் செய்து புதிய பெயரை பாஜக தலைமை டிக் அடித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பாஜக இளைஞரணியின் துணைத்தலைவராக உள்ள ஏ.பி முருகானந்தம் பாஜக தலைவராக நியமிக்கப்பட இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஏ.பி.முருகானந்தம் பொறியியல் மற்றும் சட்டத் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். 1998 ஆம் ஆண்டு பாஜகவின் இளைஞரணி மண்டல தலைவராக முதன் முதலாக பொறுப்புக்கு வந்தவர். தற்போது இளைஞர் அணியின் அகில இந்திய துணைத் தலைவராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவி வகித்து வருகிறார்.

கோயம்புத்தூர் இளைஞரணி மண்டல பொறுப்பில் இருந்து துவங்கி மாவட்ட பொதுச்செயலாளர், மாநில பொதுச்செயலாளர், தேசிய செயற்குழு உறுப்பினர், அகில இந்திய இளைஞரணி செயலாளர் என இருபது வருடங்களில் ஏ.பி.முருகானந்தத்தின் அரசியல் பயணம் மேல் நோக்கியே இருந்து வருகிறது. கேரளம் மேற்குவங்கம் கர்நாடகம் மஹராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பொறுப்பாளராக பணியாற்றிய ஏ.பி.முருகானந்தம், தமிழக பாஜகவிற்கு புதிய பலத்தை கொடுப்பார் என்று பாஜக தலைமை நினைப்பதாக கூறப்படுகிறது. பாஜக தலைமையிடம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகே தலைவர் யார் என்று தெரியவரும், அதுவரை இந்த மாதிரியான பெயர்கள் புதிதாக வந்துகொண்டுதான் இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.