அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவையில் பாஜக அரசை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, “ஆட்சியில் இருக்கும் தனிமனிதர் ஒருவரால் அநீதி இழைக்கப்பட்டால் அதை இன்னொரு ஆட்சியில் சரி செய்துவிடலாம்; நீதிமன்றத்தில் நிவாரணம் பெறலாம் அல்லது போராட்டத்தின் வாயிலாக வெற்றி கொள்ளலாம். ஆனால் அனைத்து அதிகாரங்களையும் கையில் வைத்துக்கொண்டு ஒரு கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தவறிழைக்கும் போது ஒரு நாடு ஸ்தம்பித்து போகிறது. அதையும் எதிர்கொள்ள சில தலைவர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவில் நடைபெறும் காட்டாட்சியை எதிர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார்.
வரும் 20 ஆம் தேதி நாம் திறக்க உள்ள கலைஞர் கோட்டத்தை திறக்க பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வர உள்ளார். அவருக்கு அழைப்பிதழ் கொடுக்க நேற்று முன் தினம் பாட்னாவிற்கு சென்று அவருக்கும் துணை முதலமைச்சருக்கும் அழைப்பிதழ் வழங்கினேன். 20 நிமிடங்கள் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். அவர், ‘இந்தியாவின் அரசியல் சட்டத்தை, அதில் சொல்லப்பட்டுள்ள மதச்சார்பின்மையை, சமதர்மத்தை, ஜனநாயகத்தை காப்பாற்றும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின். ஒட்டுமொத்த எதிர்க்கட்சித் தலைவர்களின் நம்பிக்கையும் மு.க.ஸ்டாலின் தான்’ என்று சொன்னார்.
கொங்கு மண்டலத்தில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அதற்கு செந்தில் பாலாஜியும் ஒரு காரணம் என்று எண்ணி இங்கு மிகச்சிறப்பாக செயல்பட்ட ஒரு அமைச்சருக்கு அமலாக்கத்துறை மற்றும் பல்வேறு நிறுவனங்களின் சார்பில் இந்த நெருக்கடி வந்துள்ளது. சிறு சிறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி ப.சிதம்பரத்தில் தொடங்கி அனைத்து தலைவர்களையும் இந்த கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள். ஆனால் அமெரிக்காவில் உள்ள ஹிண்டன்பெர்க் நிறுவனம் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது. பிரதமரின் நண்பர் அதானி பிரதமரோடு உலகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்கிறார். வெளிநாடுகளுக்கு சென்று அந்த நாட்டு பிரதமர்களுடன் அதானிக்கு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இவரே முன் நின்று கையெழுத்திடுகிறார். இது குறித்து ஹிண்டன்பெர்க் சொல்கிறது.
நாடாளுமன்றத்தில் இது குறித்து எதிர்க்கட்சிகளெல்லாம் கேள்வி கேட்டனர். பிரதமர் மௌனம் சாதித்தார். அப்படிப்பட்ட காட்டாட்சியை நடத்திக் கொண்டிருக்கும் நீங்கள் கொங்கு மண்டலத்தில் சிறப்பாக செயல்படும் அமைச்சரை முடக்கிவிட்டால் தாமரை மலரும் எனக் கருதிக் கொண்டிருக்கிறீர்கள். கலைஞர் நூற்றாண்டு விழா ஓராண்டு முழுவதும் நடந்து கொண்டுள்ளது. அடுத்தாண்டு கலைஞர் நூற்றாண்டு விழாவை கோவையில் கொண்டாடுவோம். அப்போது இந்திய நாட்டின் பிரதமர் இங்கு இருப்பார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் இங்கு இருப்பார். 10க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் இந்தியாவின் எல்லா பகுதிகளில் இருந்தும் இங்கே வந்து கலைஞர் வாழ்க என முழங்குவார்கள். அப்போது மோடி, அமித்ஷா என இருவரும் இந்தியாவில் இருக்க மாட்டார்கள்” எனக் கூறினார்.