தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. ஒவ்வொரு தொகுதியாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மக்களைச் சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். அந்தந்த கட்சிகளின் ஐடி விங்குகளும் தீவிர தேர்தல் வேலையில் இறங்கியுள்ளன. இந்தவேளையில், பிரதமர் மோடியின் பெயரிலான ஒரு இணையதளம் அதிக கவனத்தைப் பெற்றிருக்கிறது.
www.corruptmodi.com என்ற முகவரியில் இயங்குகிறது அந்த இணையதளம். இந்த இணையதளத்திற்கு முகப்புப் பக்கம் மட்டுமே இருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே Corrupt Modi (ஊழல் மோடி) என்ற பெயர் கறுப்பு மை பூசியதுபோல் இடம்பெற்றுள்ளது. மோடியின் முழு உருவப்படம் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளால் மறைக்கப்பட்டுள்ளது. அதில், கீழே இருக்கும் லிங்குகளைக் கிளிக் செய்து அனைத்து ஊழல் விவரங்களையும் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்றும், அதற்குக் கீழே A முதல் Z வரையிலான எழுத்துகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த எழுத்துகளை சொடுக்கினால் அந்த எழுத்தில் தொடங்கும் பெயரிலான ஊழல் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
என்னதான், ஊழல் மோடி என்று குறிப்பிட்டிருந்தாலும், மோடி மட்டுமல்லாது பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் நடந்துள்ள ஊழல்களைப் பற்றிய விவரங்களும் இந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. மேலும், ஊழல் மோடி என்ற பெயரில் கேம் ஒன்றும் இந்தப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
தேர்தல் சமயம் என்பதால், பா.ஜ.க. எதிர்ப்பு மனநிலையில் உள்ளோரும், எதிர்கட்சிகளும் இந்தப் பக்கத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்க முடியாத வண்ணம், தங்களது சொந்த இணையதளப் பக்கம் முடக்கப்பட்டுள்ளதால் பா.ஜ.க. தரப்பு திணறிக் கொண்டிருக்கிறது.
ரஃபேல் ஊழல் பற்றிய பாரதி புத்தகாலயத்தின் சின்ன புத்தகத்தையே அதிகாரத்தின் மூலம் கைப்பற்றி அழிக்க நினைத்தவர்கள், இந்த இணையதளத்தை என்ன செய்யப் போகிறார்களோ? என்று இந்தப் பக்கத்தைப் பகிர்ந்தவர் குறிப்பிட்டிருந்தார்.