தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழலில், அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பிரச்சார பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த சூழலில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தமிழகத்தில் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்படாமல், பாண்டிச்சேரியில் மட்டுமே அந்த சின்னத்தில் அக்கட்சி போட்டியிடலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மக்கள் நீதி மய்யத்தின் டார்ச் லைட் சின்னம் தமிழகத்தில் எம்.ஜி.ஆர். மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 'டார்ச் லைட்' சின்னம் வேண்டாம் என அந்த சின்னத்தைப் பெற்றிருந்த எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி அறிவித்தது. இதனைத்தொடர்ந்து, தற்போது மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், "மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும்!" எனத் தெரிவித்துள்ளார்.