Skip to main content

நம் வியர்வைத் துளிகளால் ஜனநாயகப் பயிரைக் காத்திட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Published on 26/02/2019 | Edited on 26/02/2019

 

வெற்றிப் பயிரை அறுவடைசெய்ய, விழிப்புடன் பணிபுரிவோம்! என்று தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 
 

அதில், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளே... உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
 

ஒரு பெரும்பணியை - வழக்கம் போல் மக்களையே மையப்படுத்தி நாம் ஆற்றும் மகத்தான கடமையைக் கழகம் மிகவும் வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறது. மக்களிடம் செல்வோம் - மக்களிடம் சொல்வோம் - மக்களின் மனங்களை வெல்வோம் என்ற இலட்சிய உணர்வுடன் ஊராட்சி சபைக் கூட்டங்களை தமிழ்நாடு முழுவதும் நடத்தி முடித்திருக்கிறது கழகம். இந்த மாபெரும் பணி நிறைவேறியதற்குக் காரணம், என்றும் நினைவில் உயிரோவியமாய் வாழ்ந்து ஒவ்வொரு நொடியும் நெறிப்படுத்தும் தலைவர் கலைஞரின் வழிநடக்கும் அன்பு உடன்பிறப்புகளாகிய நீங்கள்தான்.

 

mkstalin


 

தி.மு.கழகத்தின் செயல்தலைவராக அண்ணா  அறிவாலயத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டங்களில் கழகத்தின் ஊராட்சி செயலாளர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் உரையாடி, இயக்கத்தின் நிலையையும் மக்களின் தேவையையும் அறிந்து கொண்டேன். கழகத்தின் தலைவராக உங்களில் ஒருவனான என்னை நீங்கள் ஒருமனதுடன் தேர்வு செய்தபிறகு, ஒவ்வொரு ஊராட்சிக்கும் தி.மு.க. நிர்வாகிகள் நேரில் சென்று, மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை - கோரிக்கைகளை - விருப்பங்களை - விண்ணப்பங்களை - குமுறல்களை அறிந்து உணரும் பெரும் முயற்சிக்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டது.
 

இந்திய அளவில் எந்த ஒரு அரசியல் கட்சியும் இதுவரை செய்திராத வகையில், ஒரு மாநிலத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மக்கள் பங்கேற்புடனான ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. இதற்காகவே, தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களைக் கொண்டு அந்தந்த மாவட்ட கழகச் செயலாளர்கள், ஒன்றிய - நகர - பேரூர் - சிற்றூர் கழகச் செயலாளர்கள் ஒத்துழைப்புடன் தமிழ்நாட்டில் உள்ள 12ஆயிரத்து 617 ஊராட்சிகளிலும் தி.மு.கழகத்தின் சார்பில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
 

2019 ஜனவரி 9ஆம் நாள் தலைவர் கலைஞர் அவர்களின் சொந்தத் தொகுதியான திருவாரூரில் உள்ள புலிவலத்தில் தொடங்கிய ஊராட்சி சபை கூட்டத்தில் பங்கேற்றேன். அதே நாளில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கழக நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் பங்கேற்ற ஊராட்சி சபை கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன. ஏறத்தாழ ஒன்றரை மாதகாலம் நீடித்த ஊராட்சி சபை கூட்டங்களை பிப்ரவரி 25 அன்று விளாத்திக்குளத்தில் நிறைவு செய்தேன்.
 

ஊராட்சி  சபைக் கூட்டம் தொடங்கப்பட்ட திருவாரூர் தொகுதியும் சட்டமன்ற இடைத்தேர்தல் காண்கின்ற தொகுதி. நிறைவுக் கூட்டம் நடைபெற்ற விளாத்திகுளமும் இடைத்தேர்தல் காண்கின்ற தொகுதிதான். இடைத்தேர்தல் காண்கின்ற 21 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமல்ல, மக்களவைத்   தேர்தலை சந்திக்கவிருக்கிற தமிழ்நாட்டின் 39 நாடாளுமன்றத்  தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் கழகத்தினர் கூட்டங்களை நடத்தியதன் அடையாளமாக, அந்தந்த ஊராட்சிகளிலும் தி.மு.கழகத்தின் இருவண்ணக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் தி.மு.கழகத்தின் வெற்றிக்கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது.
 

விரைந்து வரவிருக்கின்ற நாடாளுமன்றத்  தேர்தலிலும் அதனைத் தொடர்ந்து வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.கழகக் கூட்டணி பெறப்  போகிற மகத்தான வெற்றிக்கு கட்டியம் கூறும் வகையில் இருவண்ணக் கொடி பறப்பதை உங்களில் ஒருவனான நான் கண் குளிர - மனம் குளிரப் பார்க்கிறேன். பேரறிஞர் அண்ணா தந்த கொடியை - தலைவர் கலைஞர் வாழ்நாளெல்லாம் உயர்த்திய கொடியை - இனமானப் பேராசிரியர் உள்ளிட்ட கழக முன்னோடிகள் எப்போதும் ஏந்திய கொடியை ஊராட்சிகள் தோறும் உடன்பிறப்புகள் உயர உயரப் பறக்கச் செய்திருப்பதைப் பார்க்கும்போது,  உணர்வுப் பெருக்குடன் உள்ளம் உவகையால் குளிர்வது இயற்கைதானே!
 

இரண்டு ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வக்கில்லாத வழிதேடாத ஆட்சியாளர்களால் ஒவ்வொரு ஊராட்சியும் அனுபவிக்கின்ற வேதனைகளைத்தான் மக்களின் வார்த்தைகளிலிருந்து கழகத்தினர் கேட்டறிந்தனர். குடிநீர் - சாலை - தெருவிளக்கு - பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட நிறைவேற்றப்படவில்லை என்பதையும், நியாய விலைக்கடைகளில் நடைபெறும் அநியாயம் - அனாதையாக்கப்பட்ட மகளிர் சுயஉதவிக்குழு - முதியோர் உதவித்தொகைக்காக அலைகின்ற அவலம் - 100 நாள் வேலைத் திட்டங்கள் முடக்கம் உள்ளிட்டவற்றையும் பொதுமக்கள் விரிவாக எடுத்துரைத்தனர். குறிப்பாக, ஒவ்வொரு ஊராட்சியிலும் வாழ்கின்ற பெண்கள் திரண்டு வந்து மத்திய - மாநில ஆட்சியாளர்களால் தாங்கள் படுகின்ற வேதனைகளை எடுத்துக் கூறினார்கள்.
 

ஊராட்சி சபைக் கூட்டங்களில் கழகப் பொறுப்பாளர்கள் பேசியது சிறிதளவுதான். பெரும்பாலான நேரம் மக்களின் குரலே ஊரெங்கும் ஒலித்தது. அது அவர்களின் மனக்குரலாக அமைந்தது. பெண்களின் மனசாட்சியின் குரலாக அதிர்ந்தது. ஆட்சியாளர்கள் மீது கடும் அதிருப்தியும் கனலை ஒத்த  வெறுப்பும் கொண்டுள்ள அவர்களுக்கு நம்முடைய கழகத்தின் மீதும் கோபமும் வருத்தமும் இருக்கிறது. ஆம்... இப்படிப்பட்ட ஆட்சியாளர்களை ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறீர்கள் என்பதுதான் நம்மை நோக்கி அவர்கள் எழுப்புகிற கோபக் கேள்வி.
 

ஜனநாயக நெறிப்படி தேர்தல் களத்தில் மத்திய - மாநில ஆட்சியாளர்களை விரட்டிட வேண்டும் என்பதில் தி.மு.கழகம் உறுதியாக இருக்கிறது என்பதை ஒவ்வொரு ஊராட்சி சபையிலும் எடுத்துக் கூறியபோது, அந்தத் தேர்தலுக்காகத்தான் நாங்களும் காத்திருக்கிறோம் என்பதே மக்களின் ஏகோபித்த  குரலாக ஒலித்தது.
 

பிரதமர் நாற்காலியில் இன்னும் சில நாட்கள் இருக்கப் போகின்ற  நரேந்திர மோடியும், முதலமைச்சர் நாற்காலியில்  நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்ற எடப்பாடி பழனிசாமியும் தங்கள் ஆட்சியில் நாட்டு மக்களை படுத்துகிற பாடு அனைத்தும் ஊராட்சி சபை கூட்டங்களில் ஓங்கி எதிரொலிக்கிறது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதவர்களையும் அவர்களுக்குத் துணையாக நின்றவர்களையும் ஜனநாயகக் களமான மக்களவைத் தேர்தலிலும் அதனைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலிலும் விரட்டியடித்திட மக்கள் தயாராகி விட்டார்கள். 
 

அடுத்தது அமையப் போவது யார் ஆட்சி என்பதை அறுதியிட்டுக் கூறுவதாக அமைந்தது ஊராட்சிகள் தோறும் கழகம் நடத்திய கூட்டங்கள். சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்றதாலும், வேறு சில உள்ளூர்க் காரணங்களாலும் ஒரு சில ஊராட்சிகளைத் தவிர மற்ற அனைத்து ஊராட்சிகளிலும் மக்கள் பங்கேற்புடன் கூட்டங்கள் நடந்து முடித்திருக்கின்றன. கூட்டங்கள் நடைபெறாத ஊராட்சிகளிலும் விரைவில் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்பதை பொறுப்பாளர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 

ஊராட்சி சபை கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டிருப்பது போலவே, ஒவ்வொரு ஊராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கான பூத் கமிட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 20 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்கள், பெண்கள் ஆகியோரின் பிரதிநிதித்துவத்துடன் வாக்குச்சாவடி முகவர்களையும் தேர்வு செய்து அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டியினருடனான சந்திப்புகளையும் கழக நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் வாக்குச்சாவடிவாரியாக நடத்தியுள்ளார்கள்.

 

mkstalin


 

திருவாரூர் புலிவலத்தில் ஊராட்சி சபை கூட்டத்தைத் தொடங்கி, விளாத்திக்குளத்தில் நிறைவு செய்தவரை 21 தொகுதிகளுக்கும் உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிக்கான பூத் கமிட்டி உறுப்பினர்களையும் அழைத்து தனியாகக் கூட்டம் நடத்தி, தேர்தல் பணிகளைக் கழகம் மேற்கொள்ள வேண்டிய முறைகள் குறித்து ஆலோசனை நடத்தினேன். வில்லில் இருந்து விடுபடும் கணையாகக் கழகத்தினர் தயாராக இருப்பதை உணர முடிந்தது.
 

மக்களிடம் செல்வோம் - மக்களிடம் சொல்வோம் என்ற உறுதியுடன் ஊராட்சிகள் தோறும் மேற்கொள்ளப்பட்ட கூட்டங்களால் மக்களின் மனங்களைக் கழகத்தினர் ஈர்த்து வென்று காட்டியுள்ளனர். இந்த வெற்றி, அடுத்து வரப்போகும் தேர்தலில் கிடைக்கப் போகும் வெற்றிக்கான அச்சாரம். அதுபோலவே வாக்குச்சாவடிகள் தோறும் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டிகளின் வலிமை நாம் பெறப் போகும் வெற்றிக்கு கூடுதல் வலு சேர்க்கும்.
 

மதவெறி மத்திய அரசையும், மண்தரையில் மண்டியிட்டுக் கிடக்கும் மாநில ஆட்சியாளர்களையும் மக்கள் தூக்கியெறியும் வகையில் தேர்தல் முடிவுகள் அமையவிருக்கின்றன. ஊராட்சி  சபை கூட்டங்கள் மூலம் வெற்றி விதைகளை ஊன்றியிருக்கிறோம். விதைத்தது விளைந்து, அறுவடைக்குத் தயாராகும்வரை விழிப்புடன் இருந்து நம் வியர்வைத் துளிகளால் ஜனநாயகப் பயிரைக் காத்திட வேண்டும்.
 

  விழிப்புடன் செயல்படுவோம்! மக்களுக்கு விழிப்புணர்வை தொடர்ந்து ஊட்டிடுவோம்! வெற்றிப் பயிரை அறுவடை செய்யும் திருநாள் வரை அயராமல் உழைத்திடுவோம்!. இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்