நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேனியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றி பெற்றார். இதையடுத்து தனது மகனுக்கு அமைச்சர் பதவி பெற்றிட கடும் முயற்சி செய்தார் ஓ.பன்னீர்செல்வம்.
ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த முயற்சியை தடுக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பியூஷ் கோயலின் உதவியை நாடினார்கள். அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து நிர்மலா சீதாராமனை தொடர்பு கொண்டனர். அவரும் மறுத்துவிட்டார்.
இதையடுத்து வேறுவழியின்றி ஓ.பன்னீர்செல்வத்தையே நேரில் அழைத்துப் பேசினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது, ''நீங்கள் சசிகலா குடும்பத்திற்கு எதிராக தர்ம யுத்தம் நடத்தினீர்கள். பிறகு நானும் உங்களுடன் இணைந்து சசிகலா குடும்பத்தை எதிர்த்தேன்.
சசிகலா குடும்பத்தினரால் எம்.எல்.ஏ., எம்.பி.யாக்கப்பட்டவர்கள் தஞ்சாவூர் பகுதியில் ஏராளமாக இருந்தார்கள். அவர்களை நமக்கு ஆதரவாகப் பாதுகாத்து அ.தி.மு.க. ஆட்சி நீடிக்க துணை நின்றவர் வைத்திலிங்கம். ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவர். அவர் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். அவருக்கு மத்திய மந்திரி பதவி பெற்றுத்தர விரும்புகிறேன்'' என நேரடியாகவே சொன்னார்.
வைத்திலிங்கம் அந்த பதவிக்கு பொருத்தமானவர். அவர் தியாகம் செய்தவர் என ஆதரவு கொடுத்தார் மற்றொரு துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி. அதற்கு ஓ.பன்னீர்செல்வம் மறுத்தார். முரண்டு பிடித்தார். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் போர்க்கொடி உயர்த்தினார்கள்.
மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டுமென்றால் ஓ.பன்னீர்செல்வம் தனது ஒருங்கிணைப்பாளர் பதவியையும், துணை முதலமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இணையும்போதே அவரிடம் இருந்த ஏழு எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் தொடர்பில் இருந்தார்கள். தற்பொழுது அவரிடம் ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை. அவர் மகனை மத்திய அமைச்சராக்கட்டும். நாங்கள் வைத்திலிங்கத்தை துணை முதல்வராக்குவோம். நாங்குனேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் வைத்திலிங்கத்தை வெற்றி பெற வைப்போம். அவரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக்குவோம் என மிரட்டல் தொனியில் பேசினார்கள்.
மோடி அமைச்சரவை பதவியேற்புக்கு முந்தைய நாள் எடப்பாடி பழனிசாமி வீட்டில், ''நான் என் மகனை மத்திய மந்திரியாக்க மாட்டேன்'' என எழுதிக்கொடுத்துவிட்டுப்போனார் ஓ.பன்னீர்செல்வம்.
ஆனால் மே 30ஆம் தேதி டெல்லிக்கு குடும்பத்துடன் சென்றார் ஓ.பன்னீர்செல்வம். இவர்கள் டெல்லி சென்றதும் ரவீந்திரநாத் குமார் மந்திரியாக அழைக்கப்பட்டிருக்கிறார் என செய்திகள் பரவியது. இதனால் எடப்பாடி பழனிசாமியுடன் சென்ற அமைச்சர்கள் டெல்லியில் கொந்தளிக்க ஆரம்பித்தார்கள். ''அதிமுக என்ற கட்சி இருக்கணுமா? வேணமா?'' என எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டார்கள்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, பாஜக மேலிடத்தை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார். பதவியேற்புக்கு முந்தைய கடைசி மணி நேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் மகன் பெயரை ரத்து செய்தார் அமித்ஷா.