சனாதன சக்தியை எதிர்ப்பது மட்டுமல்ல, இந்தியாவில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் தலைவராகவும் நமது முதல்வர் இருக்கிறார் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவுப் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் மெய்யநாதன், “பத்தாண்டுக் கால அதிமுக ஆட்சியினால் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருக்கும்போது, கொரோனா தொற்று 26 ஆயிரம் என்ற நிலையில், ஆட்சிப்பொறுப்பை ஏற்ற முதல்வர் ஐந்து அறிவிப்புகளைத் தந்தார். அதில் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் பெண்களுக்கு பேருந்தில் இலவசப் பயணம். பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் வேறு எந்த நாடுகளிலும் கூட கிடையாது. அதைத் தந்தவர் நமது முதல்வர்.
இந்தியா டுடேவின் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவில் சிறந்த மாநிலம், சிறந்த முதல்வர் என்ற பெருமையை நம் முதல்வர் பெற்றிருக்கிறார். இது நமக்குக் கிடைத்த பெருமை. அவர் தந்துள்ள திராவிட மாடல் ஆட்சி. அதன் உள்நோக்கம் என்னவென்றால், எல்லோருக்கும் கல்வி கொடுக்க வேண்டும். கல்வி கொடுப்பதோடு மட்டுமல்லாமல், எல்லோருக்கும் வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் கொடுக்க வேண்டும். ஒரு வளர்ச்சியடைந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் முதல்வரின் தொலைநோக்குத் திட்டம். எங்கு பாதிப்பு என்றாலும் அமைச்சர்களை, அதிகாரிகளை மட்டும் அனுப்பாமல், நேரடியாகக் களத்திற்குச் சென்று பார்வையிட்டு பிரச்சனைகளைத் தீர்க்கிறார்.
சனாதன சக்திகள் ஒன்றிய அரசாங்கம் பல்வேறு மாநிலங்களைச் சிதைக்கின்ற வேளையில், கொள்கையில் உறுதியாக இருந்து தமிழ்நாட்டைப் பாதுகாக்கும் முதல்வர் நம் முதல்வர். மாநில சுயாட்சியை மீட்டெடுக்கும் தலைவர். சனாதன சக்தியை எதிர்ப்பது மட்டுமல்ல. இந்தியாவில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் தலைவராகவும் நமது முதல்வர் இருக்கிறார். பாஜக உள்ளிட்ட அனைவரும் அலறுகிறார்கள் என்றால், இன்று ஒட்டுமொத்த தமிழகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே தலைவராக தமிழக முதல்வர் இருக்கிறார். இது நாம் பெற்ற பேறு” என்றார்.