திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக போட்டியிடும் துரைவைகோ திருச்சியில் மாநகர் பகுதிகளில் சென்று வாக்குகள் சேகரித்தார். திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் மேற்கொண்ட பிரச்சாரத்தில், திருச்சி மேலப்புதூர், கூனிபஜார், கொத்தமங்கலம், எடமலைப்பட்டி புதூர், பிராட்டியூர், பஞ்சப்பூர், கே.கே.நகர், எல்ஐசி காலனி, மங்கம்மா நகர் கிருஷ்ணமூர்த்தி நகர், காஜாமலை, உறையூர், லிங்காநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீப்பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனக்கூறி வாக்குகள் சேகரித்தார்.
வாக்கு சேகரிப்பின்போது அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், “மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. ஆனால் அவற்றையும் மீறி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மக்களுக்கு தேவையான திட்டங்களை அக்கறையுடன் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதெல்லாம் மத்தியஅரசு எந்த உதவியும் செய்யாமல் வேடிக்கை பார்த்தது. ஆனால் தமிழக அரசின் முதல்வர் உள்ளிச்ச அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் மழை வெள்ளத்திலும் நின்று மக்கள் பணியாற்றினர்.
அதுபோல, தேசிய அளவில் நமக்கு கிடைக்க வேண்டிய திட்டங்களை தமிழகம் பெற வேண்டுமெனில் ஆட்சி மாற்றம் அவசியம். பாஜகவை அகற்றி இந்திய கூட்டணியை வெற்றி பெற வைக்க இந்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும். அந்த வகையில் திருச்சியில் நமது துரை வைகோவும், பெரம்பலூரில் அருண்நேருவும் போட்டியிடுகின்றனர். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரு தொகுதிகளிலும் மக்கள் மறக்காமல் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள நமது திமுக, மதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.
திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, பகுதி செயலாளர் மோகன்தாஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கிராப்பட்டி செல்வம், மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, கவுன்சிலர்கள் கவிதா செல்வம், கலைச்செல்வி, ராமதாஸ், புஷ்பராஜ், மஞ்சுளா பாலசுப்பிரமணியன், மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி பொறுப்பாளர் மு.பூமிநாதன், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் ரொஹையா, மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு, மாநில மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார், மாநில தொண்டர் அணி ஆலோசகர் ஆ.பாஸ்கரசேதுபதி, ஆபத்து உதவிகள் அணிச் செயலாளர் சுமேஷ் உள்ளிட்ட திமுக, மதிமுக மற்றும் இந்தியா கூட்டணியின் தோழமை கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.