ஆவினில் எந்த சூழ்நிலையிலும் கலப்படம் நடைபெறவில்லை என்பதை நிருபித்து விட்டு பேசுங்கள் என்று அமைச்சர் ஜெயக்குமாருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மாண்புமிகு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் மரியாதைக்குரிய ஜெயக்குமார் அவர்களுக்கு வணக்கம்.
நேற்று (24.11.2019) செய்தியாளர்களை நீங்கள் சந்தித்த போது அவர்கள் "பாலில் அப்லாடாக்சின் எம்-1 நச்சுத்தன்மை குறித்து கேள்வி" எழுப்பியதும், அந்த கேள்விக்கு ஆவின் பால் தரமான பால் என்றும், ஆவின் பாலில் கலப்படம் நடைபெறவில்லை என சான்றளித்ததோடு, தனியார் நிறுவனங்களின் பால் ஆய்வுக்குட்படுத்தப்படும் எனவும் தெரிவித்தீர்கள். ஏற்கனவே பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களும் கடந்த 2017ம் ஆண்டு தனியார் பால் நிறுவனங்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்த நிலையில் அதனை அவரால் நிருபிக்க முடியாமல் போனதை அறியாதவரல்ல நீங்கள்.
மேலும் "அப்லாடாக்சின் எம்-1" என்கிற நச்சுத்தன்மை குறித்து சுகாதாரத்துறை அமைச்சரே வாய்மூடி மெளனமாக இருக்கும் போது மீன்வளத்துறை அமைச்சரான தாங்கள் கருத்து கந்தசாமியாக கருத்துக்களை அள்ளித் தெளித்துள்ள தங்களுக்கு ஆவின் பாலில் கடந்த காலங்களில் நடைபெற்ற கலப்படம் தெரியாமல் போனது மிகுந்த வியப்பளிக்கிறது.
குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தங்களது (அதிமுக) கட்சி பிரமுகருக்கு சொந்தமான டேங்கர் லாரி மூலம் சென்னையில் உள்ள ஆவின் பால் பண்ணைக்கு கொண்டு வரப்பட்ட பாலை விழுப்புரம் அருகே சாலையோரம் நிறுத்தி அதில் இருந்து பாலை திருடியதும், திருடிய பாலிற்கு பதில் கிணற்று நீரை கலந்த போது கையும், களவுமாக பிடிபட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டதும், அந்த வழக்கு விசாரணையை காவல்துறையினர் சரியான முறையில் நடத்தவில்லை என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து குற்றம்சாட்டப்பட்ட அந்த பிரமுகரை ஆவின் கலப்பட வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுதலை செய்ததையும் இந்த நாடே அறியும் போது பொறுப்பு மிக்க அமைச்சரான நீங்கள் மறந்து போனது அதிர்ச்சியளிக்கிறது.
மேலும் சேலம், வேலூர், தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பாலில் கலப்படம் நடைபெற்றதும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருபடி மேலே போய் கலப்படம் செய்யப்பட்ட ஆவின் பாலை ஆற்றில் கொட்டி அளித்ததும், பின்னர் வழக்குப் பதிவு செய்ததும், அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியான பெருமைமிகு (?!) வரலாறும் ஆவினுக்கு உண்டு.
அதுமட்டுமின்றி பாலில் கலப்படம் தொடர்பாக கடந்த 2012ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் "தமிழகம் பாதுகாப்பான பால் விநியோகம் செய்வதை உறுதி செய்யப்பட்ட நிலையில்" அப்போது நீதிபதிகள் இந்தியா முழுமைக்குமான அளித்த உத்தரவின் அடிப்படையில் "மக்களால் நான் மக்களுக்காகவே நான்" என முழங்கிய "உங்க அம்மா" ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான தமிழக அரசுக்கும், அப்போதைய முதல்வராக இருந்த அவருக்கும், பால்வளத்துறை அமைச்சருக்கும் "பாலில் கலப்படம் தடுக்க எங்களது சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை மனுக்கள் அளித்தும் அவை கண்டு கொள்ளப்படாமல் இருந்ததோடு," மக்களுக்கான அரசாக தமிழக அரசு செயல்படவில்லை.
இந்த நிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களைப் போன்று எந்த நிறுவனத்தின் பாலில் நச்சுத்தன்மை இருக்கிறது...? என்பதை தெரிவிக்காமல் வெளியிடப்பட்டுள்ள மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஆய்வறிக்கை குறித்து பேசும் தாங்கள் முதலில் ஆவின் பாலை தரமான பால் தரமானது தான், கலப்படம் இல்லாதது, நச்சுத்தன்மை அறவே கிடையாது என்பதை எல்லாம் சந்தேகத்திற்கு இடமின்றி நிருபித்து விட்டு தாய்ப்பாலுக்கு நிகரான பால் ஆவின் என சான்றளியுங்கள்.
அதுமட்டுமின்றி குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு எளிதில் செரிமானம் ஆகக் கூடிய அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் தமிழகம் முழுவதிலும் கலப்படம் இன்றியும், நச்சுத்தன்மை இல்லாமலும் தரமான வகையில் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யவும், அதனை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கவும் "சுகாதாரத்துறை, உணவுப் பாதுகாப்புத் துறை, கால்நடைத்துறை, ஆவின், தனியார் பால் நிறுவனங்களின் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள், பால் முகவர்கள் அடங்கிய சிறப்பு உயர்நிலைக் குழு" அமைத்திட தமிழக முதல்வர் அவர்களுக்கு பரிந்துரை செய்து அதனை நடைமுறைப்படுத்திட ஆவண செய்யுங்கள். இவ்வாறு கூறியுள்ளார்.