தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று(5.7.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுச் சென்று அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. இதனையடுத்து, பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் ஆம்ஸ்ட்ராங்கினுடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள், கட்சி நிர்வாகிகல், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பொதுமக்கள் வருகையையொட்டி பெரம்பூர், செம்பியம் பகுதியில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், குஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதி இன்று (07-07-24) காலை சென்னை வந்து ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, அங்கு பேசிய மாயாவதி, “ஆம்ஸ்ட்ராங் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். புத்தர் காட்டிய மனிதாபிமான பாதையில் மிகவும் அர்ப்பணிப்புடன் பயணித்தவர் ஆர்ம்ஸ்ட்ராங். மிகுந்த அர்ப்பணிப்புடன் தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜை வளர்த்தவர் ஆம்ஸ்ட்ராங். தனது வீட்டின் அருகிலேயே ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகளை இன்னும் பிடிக்கவில்லை. அரசு தீவிரமாக செயல்பட்டிருந்தால் உண்மையான குற்றவாளிகளை பிடித்திருக்கலாம். உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை விரைந்து போலீசார் கண்டிபிடிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு எங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும். மாநில அரசு இந்த வழக்கை சிபிஐயிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு எங்களுக்கு நியாயம் அளிக்க வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சி சோகத்தில் உள்ளது. சட்டம் ஒழுங்கை தமிழக அரசு சரி செய்ய வேண்டும். சட்ட ஒழுங்கை சீர்படுத்தி பிற்படுத்தப்பட்ட, எளிய மக்களின் நலனை பாதுகாக்க வேண்டும். அதே வேளையில், சட்டத்தை நாம் யாரும் கையில் எடுக்க வேண்டாம். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு பகுஜன் சமாஜ் கட்சி உறுதுணையாக இருக்கும்” என்று கூறினார்.