ஆந்திரப்பிரதேசம் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்ட ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு. இதனால், அதிருப்தியடைந்த தெலுங்கு தேசம் கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. மேலும், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முயற்சிக்கும் ஆதரவளித்தது. இருந்தாலும், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை கேட்பதை அவர்கள் விடுவதாக இல்லை.
இந்த ஆண்டு மத்திய பட்ஜெட் அறிவித்ததில் இருந்தே தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில், ஆந்திரப்பிரதேசம் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டங்களின் போது தெலுங்குதேசம் கட்சியின் எம்.பி. நரமல்லி சிவபிரசாத் ஒவ்வொரு முறையும் மாறுவேடம் அணிந்துவந்து போராட்டத்தில் கலந்துகொண்டு பலரின் ஆதரவைப் பெற்றுவருகிறார். பள்ளி மாணவன், பெண், மாட்டுவண்டி ஓட்டுபவர், நாரதர் என அவர் அணிந்துவந்த வேடங்கள் அதிகம் கவனம் பெற்றன. இந்நிலையில், இன்று காலை நாடாளுமன்றத்திற்கு வந்த சிவபிரசாத் பரசுராமர் வேடமணிந்து வந்திருந்தார்.
TDP MP Naramalli Sivaprasad has today dressed up as 'Parashurama'( avatar of Lord Vishnu) to protest over demand for special status for Andhra Pradesh. Sivaprasad had earlier also dressed up as a woman, a cattle herder & a school boy among others #Delhi #BudgetSession pic.twitter.com/9x2J9cJdqo
— ANI (@ANI) April 2, 2018
புராணக் கதைகளில் விஷ்ணு பத்து அவதாரங்களை மேற்கொண்டதாக சொல்லப்பட்டுள்ளது. அதில் பரசுராமர் ஆறாவது அவதாரம். பூமியில் தீய சக்திகளின் ஆதிக்கம் அதிகமான சமயத்தில் விஷ்ணு இந்த அவதாரத்தை மேற்கொண்டார் என்று நம்பப்படுகிறது. இன்று சிவபிரசாத் இந்த வேடத்தைப் போட்டதற்கான காரணத்திற்குப் பின் இருக்கும் அரசியலும் அதுதான் என்று போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.