Skip to main content

"எடப்பாடி பழனிசாமி மதுவை ஒழிக்க வேண்டும் என போராடப் போவதில்லை" - மாணிக்கம் தாகூர் எம்.பி

Published on 22/05/2023 | Edited on 22/05/2023

 

manickam tagore talks about edappadi palanisamy government

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32 ஆவது நினைவு தினம் நேற்று (21.05.2023) அனுசரிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள வீர் பூமி நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் காங்கிரஸார் மலர் அஞ்சலி செலுத்தினர். இதே போன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசு மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

 

இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு எம்.பி மாணிக்கம் தாகூர் மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலரும் உடன் இருந்தனர். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "கடந்த 2016 ஆம் ஆண்டு கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 2 ஆயிரம் ரூபாய் கொண்டு வரப்படுவதாக மோடி தெரிவித்தார். அப்போது ராகுல் காந்தி ஆயிரத்தை அழித்து 2 ஆயிரம் கொண்டு வந்தால் எப்படி கருப்பு பணம் ஒழியும் என்று கேள்வி எழுப்பினார். தற்போது பாஜக 2 ஆயிரத்தை ஒழிப்பதாக கூறுவது பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

 

கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தோல்வியை மறைக்கத்தான் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்பப் பெறும் முடிவை அறிவித்திருப்பதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது சரியான கணிப்பு தான். தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி மதுவை ஒழிக்க வேண்டும் என போராடப் போவதில்லை. ஏனென்றால் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கிளைகளை கிராமந்தோறும் உருவாக்கிய பெருமை எடப்பாடி பழனிசாமியையே சாரும். அவரது இந்த சாதனையால் தான் அதிக எண்ணிக்கையிலான டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இது ஊர் அறிந்த உண்மை. எடப்பாடி ஆட்சியில் கிராமந்தோறும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடும் வேலையை திமுக அரசு மேற்கொள்ள வேண்டும்" என தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிரான வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Case against For the Congress candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், “விருதுநகர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். இவரின் ஆதரவாளர்கள் தேர்தல் விதிகளை மீறி, வாக்காளர்களுக்கு டோக்கன்களை வினியோகித்தனர். எனவே மாணிக்கம் தாகூரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 14 ஆம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று (22.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்த அடுத்த நாள் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவர்களே இது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள். இது சம்பந்தமாக மனுதாரர் தேர்தல் வழக்கு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்திற்கு அளித்த புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். மேலும் விளம்பர நோக்குடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனக் கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Next Story

விசாரணைக் கைதி மரணம்; எடப்பாடி பழனிசாமி கண்டனம்!  

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiruvallur incident Edappadi Palaniswami condemned

விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம். பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு முதல்வரையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.