தூத்துக்குடி மாவட்டத்தில் 12 யூனியன்களில் பல ஊராட்சிப் பகுதிகளில் பஞ்.தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதையடுத்து மீதமாக முதற்கட்டமாக 1126 உள்ளாட்சிப் பகுதிகளுக்கும் 2ம் கட்டமாக 1275 பதவிகளுக்கும் தேர்தல் நடை பெற்றது. மாவட்டத்தின் 12 யூனியன்களில் பதிவான வாக்குகள் 12 மையங்களில் எண்ணப்பட்டன.
குறிப்பாக பரபரப்பாகப் பேசப்பட்ட கயத்தாறு யூனியனின் வாக்குகள் பிரச்சினை காரணமாக கோவில்பட்டியின் துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் எண்ணப்பட்டன. கயத்தாறு யூனியனில் தான் அமைச்சர் கடம்பூர் ராஜின் கிராமம் வருகிறது. எனவே யூனியன் சேர்மன் பதவி பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டதால், அமைச்சர் கடம்பூர்ராஜ் 13 வது வார்டில் மகேஸ்வரி என்ற வேட்பாளரை யூனியன் கவுன்சிலர் பதவி மற்றும் சேர்மன் பொறுப்பிற்காகவும் களமிறக்கி அவரே பிரச்சாரமும் செய்தார். ஆனால் கட்சி கரன்சி தரும் என்று நம்பிய மகேஸ்வரிக்கு கரன்சி வந்து சேரவில்லை. மாறாக தன் சொந்தப்பணத்தைக் காலி செய்தார்.
அதே சமயம் இந்த யூனியனின் கடம்பூரைப் பூர்வீகமாகக் கொண்டவர் கடம்பூர் ஜமீன் பரம்பரையான அ.ம.மு.க.வின் தென் மண்டல பொறுப்பாளரான மாணிக்கராஜா. ஆதிமுதல் தற்போது வரை கயத்தாறு யூனியன் அவர் வசமிருக்கும். வாய்ப்பை பயன்படுத்திக் கொணட ராஜா, தனது கட்சியின் சார்பில் வேட்பாளர்களை களமிறக்கியதோடு போட்டியிலிருந்த மூன்று தி.மு.க. வேட்பாளர் உட்பட தானும் 15 வது வார்டில் நின்றார் யூனியன் முழுக்க எதிரணி வேட்பாளர்கள் அனைவரின் தேர்தல் செலவையும் ராஜாவே ஏற்றார். வாக்கு எண்ணிக்கையில் யூனியனை அ.ம.மு.க. கைப்பற்றியது. அமைச்சர் கடம்பூர்ராஜின் வேட்பாளர் கரையேறவில்லை. முடிவு அறிவிக்கப்பட்டதில் 8 பேர் அ.ம.மு.க.வைச் சேர்ந்தவர்ள். ம.தி.மு.க. 2 தி.மு.க. 2 சுயே 1 என்ற விகிதத்தில் வென்றுள்ளனர். கயத்தாறு அ.ம.மு.க. வசம் போனது.
இதனிடையே தூத்துக்குடி மாவட்டத்தின் பிச்சிவிளை பஞ்.தலைவி பதவி பட்டியலினத்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதை எதிர்ப்புத் தெரிவித்து 6 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு யாரும் போட்டியிடவில்லை. பஞ்.தலைவர் பதவிக்கு ராஜேஸ்வரி, சுந்தராச்சி இருவர் போட்டியிட்டனர். கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்தனர். சமாதான பேச்சு வார்த்தை எடுபடவில்லை. புறக்கணிப்பு காரணமாக இந்த வார்டில் பட்டியலின மக்கள் 6 பேர்கள் உள்ளிட்ட 13 பேர் மட்டுமே வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கையில் ராஜேஸ்வரிக்கு 10 வாக்குகளும், சுந்தராச்சி 2 வாக்குகள் செல்லாதது ஒன்று என்றானதால் 10 வாக்குகள் பெற்று பஞ்.தலைவியானார் ராஜேஸ்வரி. தமிழகத்தில் 10 வாக்குகள் பெற்று பஞ்.தலைவியான ஒரே தலைவர் ராஜேஸ்வரி தான்.