தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து, தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக, தேர்தல் கூட்டணி குறித்தான பேச்சு வேகம் எடுக்க ஆரம்பித்தது. அதிமுக ஒருபுறம் பா.ஜ.க., தே.மு.தி.க. உடனும், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடனும் கூட்டணிப் பேச்சு வார்த்தையை நடத்திவருகிறது. தொகுதிப் பங்கீட்டில் இன்னும் சமரசம் ஏற்படாததால், திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில், இன்று காலை கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, “கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் நல்ல முறையில் சென்றுகொண்டிருக்கின்றது. இடங்கள் ஒதுக்குவது தொடர்பாக திமுக நல்ல முடிவு எடுக்கும். கடந்த 15ஆண்டுகாலமாக இந்தியாவில் கொள்கை ரீதியாக திமுகவும் காங்கிரஸும் கூட்டணி அமைத்துள்ளது சிறப்பிற்குரியதாகும். வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராவது உறுதி.
காங்கிரஸின் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு தமிழக மக்கள் பெரும் வரவேற்பு அளித்து தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். மத்தியில் மோடி ஆட்சியும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியும் அகற்றப்படுவது உறுதி. தொகுதிப் பங்கீடு தொடர்பாக இனி திமுகதான் முடிவுசெய்ய வேண்டும். பந்து அவர்கள் கையில்தான் உள்ளது. காங்கிரஸுக்கென ஒரு பலம் உள்ளது. அந்தப் பலம் என்ன என்பது ராகுல், தமிழகம் வந்தபோது தெரிந்தது. பத்து பைசாகூட செலவில்லாமல் கூட்டம் கூடுகிறது. தமிழகத்தில் சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும். வன்னியர் உள் ஒதுக்கீடு என்பது மக்கள் மன்றத்தில் பேசி விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட வேண்டிய விஷயம்.
காங்கிரஸ் உட்பட எல்லாக் கட்சிகளிலும் ஊடுருவி, பாஜக தங்கள் சர்வாதிகாரத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி அந்த முயற்சியைத் தகர்த்தெறியும். தமிழக சட்டமன்றத் தேர்தலில் 'வளர்ச்சி' என்ற முழக்கத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்வோம். பாஜக, ஆர்.எஸ்.எஸ். நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள். அதற்கு காங்கிரஸ் இடம் கொடுக்காது” எனத் தெரிவித்தார்.