நாடு முழுவதுமுள்ள மருத்துவக் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கையை 100% மையப்படுத்த பொது மருத்துவ கலந்தாய்வை நடத்த தேசிய மருத்துவ கழகம் (என்.எம்.சி) முன்வந்துள்ளது. இதன்படி நாடுமுழுவதும் உள்ள அரசு தனியார் தன்னாட்சி மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஒரு கட்ட கலந்தாய்வு மூலம் நடத்த என்.எம்.சி திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது. பொதுக் கலந்தய்வை கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்தது.
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நாடு முழுவதும் மையப்படுத்தப்பட்ட பொது கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான விதிமுறையை தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது. தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படியே அனைத்து மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், “எம்.பி.பி.எஸ் கலந்தாய்வு மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. இனி மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்கு செல்ல இருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்” என்று கேள்வி முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, “திமுகவின் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஒரு பேட்டியில் சொல்கிறார், ‘நாங்கள் எப்படி மெடிக்கல் கவுன்சில் கொடுப்போம் என்றால், நாங்களாகவே ஒரு மெரிட் லிஸ்ட் எடுத்துக்கொள்வோம். எந்த குழந்தைகளுக்கு எல்லாம் 100% சீட் கிடைக்குமோ அந்த குழந்தைகளுக்கு தனியார் கல்லூரிகளில் சீட் கொடுத்துவிடுவோம். அதன் பின் அவர்கள் அரசு கல்லூரிகளில் சீட் கிடைத்ததும் போய்விடுவார்கள். அந்த குழந்தை மாறியதும் காலியான சீட்டை விற்றுவிடுவோம்’ என்றார். இதை ஆற்காடு வீராசாமி ஆன் ரெக்கார்டு சொன்னது. திமுகவினர் இதை பொய் என நிரூபித்தால் நான் அரசியலை விட்டே சென்று விடுகிறேன்.
அதனால் தான், 2006 இல் இருந்து 2011 ஆட்சியில் மிக அதிகமாக தனியார் கல்லூரிகள் தமிழகத்தில் திறக்கப்பட்டன. நீட் வருவதற்கு முன் மெடிக்கல் சேர்க்கை என்பது ஊழல் நிறைந்தது. இதற்கு ஆற்காடு வீராசாமியே சர்டிஃபிகேட் கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறந்துள்ளோம் என்றால் அதற்கு முழுமுதற்காரணம் பிரதமர் மோடி. இந்தியாவில் எங்கும் 11 மருத்துவக் கல்லூரிகளை ஒரே நேரத்தில் திறக்கவில்லை. தமிழகத்தில் திறந்துள்ளோம். 9 வருடத்தில் மருத்துவ சேர்க்கையை இரட்டிப்பாக்கியுள்ளோம். அதனால் தான் கிராம குழந்தைகள், விவசாய குழந்தைகள், ஏழைத்தாயின் குழந்தைகளுக்கு மருத்துவ சீட் கிடைக்கிறது” என்றார்.