2026 தமிழகம், கேரளாவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று திண்டுக்கல்லில் பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை பேசினார்.
திண்டுக்கல்லில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “வேளாண்மை சட்டங்கள், விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளவை. எனவே விவசாயிகள் மக்களை சந்தித்து எதிர்க் கட்சியினர் கூறும் பொய்யை நம்பாதீர்கள் என்று கூறுகிறோம். விவசாயிகள் நேரடியாக விளை பொருட்களை விற்க சட்டம் கொண்டு வருவதாக காங்கிரஸ், தி.மு.க. ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். தற்போது போராட்டம் நடத்துகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் 3 பொருட்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஆதாரவிலை இருந்தது. ஆனால், பா.ஜ.க. ஆட்சியில் 24 பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படுகிறது.
பஞ்சாபைச் சேர்ந்த இடைத்தரகர்கள் தான் போராட்டம் நடத்துகின்றனர். மு.க.ஸ்டாலின் அதற்கு முன்பு எங்கே சென்றார். மக்களுக்கு அனைத்து விஷயங்களும் தெரியும் தமிழகத்தின் வளர்ச்சிக்குத் திராவிடத் தலைவர்கள் மட்டுமே காரணம் என்று கூறக்கூடாது. காமராஜர், குமாரசாமி ராஜா ஆகியோர் செய்த நன்மைகளை மறைக்கின்றனர். தமிழக அரசியல் கெட்டுவிட்டது. எனவே இளைஞர்கள் மாற்று அரசியலை முன்னெடுத்துச் செல்கிறோம். திண்டுக்கல் பழனியில் பா.ஜ.க வலுவாக உள்ளது. ஆனால், தொகுதி ஒதுக்கீடு பங்கீடு குறித்து தலைமை முடிவு எடுக்கும்” என்று கூறினார்.
அதன்பின், பா.ஜ.க வர்த்தக அணி சார்பில், 'திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியை நமதாக்குவோம்' என்னும் தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கு கடந்த 10 ஆண்டுகளாகத் தேர்தல் பிரச்சாரம் செய்யும் ஒரே கட்சி தி.மு.க.தான். தி.மு.க. ஆட்சியில் ஏரிகள், குளங்கள், ஆறுகள் காணாமல் போய்விட்டன.
திண்டுக்கல்லில் குடகனாற்றை மீட்டெடுத்தே தீருவோம். கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலில் 17 சதவீத ஓட்டுகளைப் பெற்றுள்ளோம். எனவே 2021 மேற்கு வங்காளத்திலும் 2026 ஆம் ஆண்டு கேரளா மற்றும் தமிழகத்திலும் பா.ஜ.க ஆட்சி அமைப்போம்” என்று கூறினார்.