Skip to main content

“டெல்லிய நம்பர் 1 ஆக்கிட்டோம்.. அடுத்து இந்தியாதான்” - களத்தில் இறங்கிய ஆம் ஆத்மி

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

Aam Aadmi started Make in India  Tamil Nadu

 

“நாங்க டெல்லிய நம்பர் 1 ஆக்கிட்டோம். அடுத்து 2024ல் இந்தியாவை நம்பர் 1 ஆக்குவோம்" என பாதயாத்திரை நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி மாநிலத் தலைவர் பேசியது மக்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

இந்திய நாட்டின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் ‘மேக் இன் இந்தியா நம்பர் 1' என்ற பிரச்சார இயக்கத்தை டெல்லி மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி வைத்து இந்த இயக்கத்தில் நாட்டின் குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அறைகூவல் விடுத்தார். 

 

மேலும், சுகாதாரம், கல்வி, விவசாயம் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் நிலையான கவனத்தை செலுத்தினால் இந்தியாவை மீண்டும் நம்பர் 1 ஆக்கலாம் எனத் தெரிவித்தார். அதே சமயம், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை காட்டமாக விமர்சிக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், நாட்டின் வளர்ச்சிக்காக நாம் இந்த அரசியல் தலைவர்களை நம்பி இருக்க முடியாது. அப்படி செய்வது நமக்கும், நாட்டுக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் எனப் பேசினார்.

 

இந்நிலையில், கெஜ்ரிவாலின் கனவு திட்டமான ‘மேக் இன் இந்தியா நம்பர் 1’ குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி சார்பில் திருச்சியில் இருந்து கன்னியாகுமரி வரை பாதயாத்திரை நடத்தப்படுகிறது. மேலும், அக்கட்சியின் மாநிலத் தலைவர் வசீகரன் தலைமையில் மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு இந்த பாதயாத்திரையின் தொடக்கவிழா நடைபெற்றது.

 

இது குறித்து ஆம் ஆத்மி மாநிலத் தலைவர் வசீகரன் பேசும்போது, “நம்ம நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்சி 75 வருஷம் ஆகுது.. ஆனா, இப்ப வரைக்கும் 66 சதவீத மக்களுக்கு தரமான கல்வி கிடைக்கல. அரசு மருத்துவமனையில சுகாதார வசதிகள சரியா கட்டமைக்கல. இதையெல்லாம் மாற்றுவதற்கு ஒரே வழி மேக் இந்தியா நம்பர் 1 திட்டம் தான். இதை வெச்சி நாங்க டெல்லிய நம்பர் 1 ஆக்கிட்டோம். நெக்ஸ்ட் பஞ்சாப நம்பர் 1 ஆக்கப்போறோம். அதே மாதிரி 2024ல் இந்தியாவை நம்பர் 1 ஆக்குவோம்” எனப் பேசியிருந்தார்.

 

- சிவாஜி

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை” - ஆம் ஆத்மி அதிரடி முடிவு!

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
No alliance with any party Aam Aadmi Action Decision

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. அந்த வகையில் நாட்டின் தலைநகரான டெல்லியில் மொத்தம் 7 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதிகளையும் பாஜக தான் வென்றது. மேலும் இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகளால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி அமைச்சர் கோபால் ராய் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் டெல்லி சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்துக் கூறும்போது, ​​“மக்களவைத் தேர்தலுக்காக இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டது என்பது கூட்டணி ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளிலேயே தெளிவாகிறது. சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரையில் எந்த கூட்டணியும் அமைக்கப்படவில்லை. ஆம் ஆத்மி கட்சி தனது முழு பலத்துடன் தேர்தலில் போட்டியிடும்.

இந்தியா கூட்டணி மக்களவைத் தேர்தலுக்காக உருவாக்கப்பட்டது என்பது ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக உள்ளது. நாங்கள் மக்களவை தேர்தலில் ஒன்றாகப் போட்டியிட்டோம், ஆனால் டெல்லி சட்டமன்ற தேர்தலில், நாட்டில் உள்ள எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை. டெல்லி மக்களுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

‘டெல்லி மக்களுக்கு உதவ வேண்டும்’ - உ.பி, ஹரியானா முதல்வர்களுக்கு டெல்லி அமைச்சர் கடிதம்

Published on 02/06/2024 | Edited on 02/06/2024
Delhi Minister's Letter to Chief Ministers of UP, Haryana  for Water scarcity

தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தலைநகர் டெல்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் அங்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. 

மேலும், ஹரியானா அரசு டெல்லிக்கு தர வேண்டிய தண்ணீரில் பற்றாக்குறை ஏற்பட்டதால், டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இன்னும், சில பகுதிகளில் வாழும் மக்கள் டேங்கர் லாரியை நோக்கி முண்டியடித்து கொண்டு தண்ணீரைப் பிடிப்பதற்காக காலி குடங்களுடன் செல்லும் காட்சிகள் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனிடையே தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், தண்ணீர் வீணாவதைத் தடுக்கும் டெல்லி நீர்வளத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. 

அந்த வகையில், தண்ணீரை வீணடித்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மேலும், டெல்லி குடிநீர் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி டெல்லி முழுவதும் 200 குழுக்களை நியமித்து, குழாய்கள் மூலம் வாகனங்களைக் கழுவுவினாலும் தண்ணீர் தொட்டிகள் நிரம்பி வழிந்தாலும் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லியில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவ வேண்டும் என உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநில அரசு முதல்வர்களுக்கு டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘டெல்லியில் கடுமையாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இந்த நெருக்கடியான சமயத்தில் டெல்லி மக்களுக்கு உத்தரப் பிரதேசம், ஹரியானா மாநில அரசு கைகொடுக்க வேண்டும். மேலும், பருவமழை வரும் வரை ஒரு மாத காலத்திற்கு டெல்லிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.