தி.மு.க. தலைமை மீது அதிருப்தியில் இருந்த எம்.எல்.ஏ. கு.க.செல்வம், பா.ஜ.க.வில் இணைவதற்காக டெல்லி சென்றிருந்தார். பா.ஜ.க.வின் தேசிய தலைவர் நட்டாவை சந்தித்துப் பேசிவிட்டுப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கு.க.செல்வம், ‘’பா.ஜ.க.வில் இணைவதற்காக டெல்லிக்கு வரவில்லை. ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் 2 லிஃப்ட்கள் அமைக்க வேண்டுமென மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் கோரிக்கை வைத்திருந்தேன். அதற்காகத்தான் வந்தேன்‘’ என்று திடீர் பல்டி அடித்தார்.
மேலும், மோடியை புகழ்ந்து பாராட்டியதுடன், தி.மு.க.வின் உட்கட்சி தேர்தலை ஸ்டாலின் நடத்த முன் வரவேண்டும். என் மீது நடவடிக்கை எடுத்தால் அதனை எதிர்கொள்வேன் என்றும் சவால் விடும் தொணியில் பேசினார் கு.க.செல்வம்.
இதற்கிடையே, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டியிருந்தாலோ, மாநிலத்தைக் கடந்து வேறு மாநிலத்திற்குச் செல்வதாக இருந்தாலோ இ-பாஸ் அவசியம் என்பதை நடைமுறைப்படுத்தியுள்ளது எடப்பாடி அரசு. இந்த இ – பாஸ் பெறுவது ஏக கெடுபிடிகள் இருக்கிறது. அவ்வளவு எளிதாக இ-பாஸ் கிடைத்து விடுவதில்லை. அப்படிப்பட்ட சூழலில், கு.க.செல்வத்திற்கு இ-பாஸ் வழங்கப்பட்டதா? இ-பாஸ் எடுத்துக்கொண்டுதான் அவர் டெல்லி சென்றாரா? அப்படி இ-பாஸ் எடுக்கப்பட்டிருந்தால் டெல்லி செல்வதற்காக என்ன காரணத்தைத் தெரிவித்திருந்தார்? என்கிற கேள்விகளுடன் சர்ச்சைகள் எதிரொலிக்கிறது.