நடந்து முடிந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அதிமுக எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த தேர்தலில் அமமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக வேட்பாளர்கள் முழுமையாக தோல்வியைச் சந்தித்தனர். கட்சியின் நிறுவனத் தலைவரான விஜயகாந்த், உடல்நிலை காரணமாக கட்சியைத் தொடர்ந்து வழிநடத்த முடியாத நிலையில், கட்சிப் பொறுப்பை முழுமையாக அவரது மனைவி பிரேமலதா கையில் எடுக்கத் துவங்கினார்.
தற்போது கட்சியின் முழு பணிகளையும் அவர் செய்துவரும் நிலையில், கட்சியின் நிலையை அறிந்துகொண்டு நிர்வாகிகள் ஒவ்வொருவராக கட்சியைவிட்டு விலக ஆரம்பித்துள்ளனர். அதில், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான கிருஷ்ணகோபால், நடந்து முடிந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார். இவர், கடந்த 2016ஆம் ஆண்டும் தேமுதிக தலைமையிலான மக்கள்நல கூட்டணியில் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அதிலும் தோல்வியைச் சந்தித்தார். இந்நிலையில், அவர் இன்று (15.10.2021) தன்னுடைய முகநூல் பக்கத்தில் கட்சியிலிருந்து தான் விலகுவதாக பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், ‘கனத்த இதயத்துடன் தேமுதிகவிலிருந்து வெளியேறுகிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது தற்போது பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. மேலும் அந்தப் பதிவில், ‘தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான பற்றால் தேமுதிகவில் இணைந்து செயல்பட்டுவந்தேன். இதுநாள்வரை கட்சியை ஒருபோதும் குறை கூறியதில்லை; இனிமேலும் நான் கூறப்போவதில்லை. நான் விலகுவதாக அந்த அறிவிப்பு வெளியிட்டவுடன் பலர் என்னைத் தொடர்புகொண்டனர். இருப்பினும் நான் என்னுடைய முடிவில் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறேன்’ என்று தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.