தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் வெள்ளிக்கிழமை காலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சஞ்சய் தத், டாக்டர் சிரிவல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், மாநில செயற்குழு தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், இன்னாள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன.
கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய கே.எஸ்.அழகிரி,
பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து அதன் மூலம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளோம். கூட்டணியே வெற்றிக்கு காரணம். கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. நாம் எங்கே விழுந்து கிடக்கிறோம் அதற்கு என்ன காரணங்கள் என்பது பற்றி உங்களிடம் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.
பொதுவாக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைமை வரும் போது பத்து அல்லது இருபது மாவட்டத் தலைவர்களை மாற்றுவார்கள். இது கடந்த காலங்களில் வரலாறு. ஆனால் நான் புதிய மாவட்ட தலைவர்களுக்கு மூன்று விதமான தேர்வு வைப்பேன். அதில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் நீடிக்க முடியும். மற்றவர்கள் விலகிக் கொள்ளலாம்.
வருகிற உள்ளாட்சித் தேர்தலில் அவரவர் மாவட்டங்களில் 100 சதவீதம் காங்கிரசார் போட்டியிட ஏற்பாடு செய்ய வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் அதிகமான இடங்களில் போட்டியிட்டால் தான் நமக்கு மரியாதை. வெற்றிக்கு கூட்டணியை நம்பியிருக்கக் கூடாது.
ஆனால் நாம் தான் உழைக்க வேண்டும். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் மட்டும் காங்கிரஸ் தோற்று இருக்கிறது. அதுவும் தேர்தல் ஆணையம் செய்த சதியால், குழப்பத்தால் தான் இந்த தோல்வி. வேறு எந்த காரணமும் இல்லை என்றார்.